ஏ.ஐ., தொழில்நுட்பத்தை மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி அறிவுரை
ஊட்டி: “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மாணவர்கள் ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும்” என, விஞ்ஞானி பிரபாகரன் பொன்னுசாமி தெரிவித்தார்.ஊட்டியில் இயங்கி வரும் கிரசன்ட் பள்ளியின், 28 வது ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் உமர் பாரூக் தலைமை வகித்தார்.விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி, மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானி பிரபாகரன் பொன்னுசாமி பேசியதாவது:நீலகிரி மாவட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வகத்தை ஏற்படுத்திய முதலாவது பள்ளி என்ற பெருமையை பெருமைய பெற்ற இப்பள்ளி, உலக பள்ளிகள் கூட்டமைப்பில் இடம் பெற்று மலை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. உலகில் வேகமாக மாறிவரும் மாற்றங்களுக்கு ஏற்ப நமது கல்வி முறைகளில் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களை தயார் படுத்துவது அவசியமாக உள்ளது. தற்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதை மாணவர்கள் ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும்.இந்த தொழில் நுட்பத்தில், 'கோ பைலட்; சாட் ஜிபிடி' என, பல்வேறு உபகரணங்கள் உள்ளன. அந்த உபகரணங்களை சரியான முறையில் பயன்படுத்தி நாம் வெற்றிப் பாதையில் செல்ல வேண்டும். கல்வி மற்றங்களால், மாணவர்களிடமிருந்து பெற்றோர்கள் அதிக அளவில் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.அதே வேளையில், மாணவர்கள் எதில் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதை கண்டறிந்து, ஆசிரியர்கள், மாணவர்கள் அவர்களை மேம்படுத்தினால் நிச்சயம் சாதனை படைக்க முடியும். அவர்களின் திறமைகளை நாம் ஒருங்கிணைத்து ஊக்குவிப்பதன் வாயிலாக அவர்களை சாதனையாளராக உருவாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.