தகுதியை மறைத்து வேலை பெறுவது மற்றவர்களின் உரிமையைப் பறிக்கும் செயல்: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: உண்மையான தகுதியை மறைத்து வேலை பெறுவது மற்றவர்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.சிண்டிகேட் வங்கியில் தற்காலிக வங்கி உதவியாளராகப் பணியாற்றி வந்த ஒருவர் தான் ஒரு பட்டதாரி என்ற உண்மையை மறைத்து, 10ம் வகுப்பு வரையிலான கல்வித் தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட ஒரு பதவியில் நியமனம் பெற்றார்.இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமானுல்லா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 10ம் வகுப்பு தகுதிக்கான வங்கிப் பணியில் பட்டப்படிப்பை மறைத்துச் சேர்ந்தவரின் பணிநீக்கத்தை உறுதி செய்து தீர்ப்பு அளித்தது.குறைந்த கல்வித் தகுதியான வேலைவாய்ப்பில் அதிக தகுதி உடையவர்கள் தங்களின் தகுதியை மறைத்து வேலை பெறுவது பிறரின் உரிமையை பறிக்கும் செயல் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.குறைந்த கல்வித் தகுதி உடையவர்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட ஒரு பணிக்கு, உயர்கல்வித் தகுதிகளை மறைப்பது என்பது, உண்மையாகவே தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அந்த வேலையை மறுப்பதற்குச் சமம். குறைந்த கல்வித் தகுதி உடையவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பதவிக்கு, உயர் கல்வித் தகுதி உடையவர்களைப் பரிசீலிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.