உள்ளூர் செய்திகள்

முதல்வர் கோப்பை விளையாட்டு - ஹாக்கியில் சென்னையும், கபடியில் மதுரையும் வெற்றி!

பெரியமேடு: மாநில அளவிலான, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், ஹாக்கியில் சென்னை அணியும், கபடியில் மதுரை அணியும் வெற்றி பெற்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், நேற்று துவங்கி நாளையுடன் முடிகின்றன. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட, தமிழகம் முழுவதும் இருந்து, 1,632 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கபடி, வாலிபால் உள்ளிட்ட குழு போட்டிகளில், எட்டு அணிகள் பங்கேற்று, நாக்-அவுட் முறையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் லீக் முறையில் விளையாடுகின்றன. அதில், அதிக புள்ளிகள் பெறும், அணிகள் முதல் இடத்தை பிடிக்கும். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த, கபடி போட்டியில், ஆண்கள் பிரிவில், திருவாரூர் அணி, 40-13 என்ற புள்ளி கணக்கில், சேலம் அணியை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில், மதுரை அணி 29-25 என்ற புள்ளி கணக்கில், ஈரோடு அணியை வென்றது. நந்தனத்தில் நடந்த ஹாக்கி போட்டியில், ஆண்கள் பிரிவில், திருச்சி அணி, 5-1 என்ற கோல் கணக்கில், சேலம் அணியை வென்றது. சென்னை அணி, 6-2 என்ற கோல் கணக்கில், திண்டுக்கல் அணியை வீழ்த்தியது. காஞ்சிபுரம் அணி, 1-0 என்ற கோல் கணக்கில், மதுரை அணியை வெற்றி கொண்டது. பெண்களில், திருவண்ணாமலை அணி, 1-0 என்ற கோல் கணக்கில், நாகப்பட்டினம் அணியை தோற்கடித்தது. ஈரோடு அணி, 4-0 என்ற கோல் கணக்கில், சென்னை அணியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்