பள்ளிக்கு வராத மாணவருக்கு ஆலோசனை வழங்கி மீண்டும் வரவழைக்க வேண்டும்: கலெக்டர் அறிவுரை
நாமக்கல்: பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று, ஆலோசனை வழங்கி, மீண்டும் வரவழைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என நாமக்கல் கலெக்டர் உமா கூறினார்.நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், 2023 - 24ம் கல்வியாண்டில், அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பள்ளி செல்லாத குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. நாமக்கல் கலெக்டர் உமா தலைமை வகித்தார்.அப்போது அவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பள்ளி செல்லாத குழந்தைகள் திட்ட கூறின் கீழ், இதுவரை, 126 மாணவ, மாணவியர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 45 மாணவ, மாணவியர் விருப்பமின்மை காரணமாக பள்ளிக்கு வரவில்லை. மேற்படி விருப்பமின்மை காரணமாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆற்றுப்படுத்துனர் மூலம், ஆலோசனை வழங்கி பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.வட்டார கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பயிற்றுனர்களின் பள்ளி செல்லாத குழந்தைகளை, பள்ளியில் சேர்ப்பதற்கான பணி முன்னேற்ற அறிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க உள்ளது. அதனால், அனைத்து அலுவலர்களும் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று, ஆலோசனை வழங்கி, குழந்தைகளை பள்ளிக்கு மீண்டும் வரவழைக்க அனைத்து பணிகளையும் தொய்வின்றி சேவை மனப்பான்மையுடன் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.