மாணவர்களின் நலனுக்காக கலாம் சபா தன் வீட்டில் இடம் ஒதுக்கிய விஞ்ஞானி டில்லிபாபு
சென்னை: வியாசர்பாடியில் உள்ள தன் இல்லத்தின் ஒரு பகுதியை, கலாம் சபா என்ற பெயரில், மாணவர்களின் நலனுக்காக ஒதுக்கியுள்ளார், ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு. இதை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்.வியாசர்பாடியில் பிறந்து வளர்ந்தவர் டில்லிபாபு. கடுமையாக உழைத்து படித்து, இன்று ராணுவ விஞ்ஞானியாக மத்திய அரசின் உயர் பொறுப்பில் பெங்களூருவில் வசித்து வருகிறார்.மாணவர்களுக்கு வழிகாட்டும் விதத்தில், என்ன படிக்கலாம்; எப்படி முன்னேறலாம் என்பது குறித்து தமிழில் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். தினமலர் நடத்தும் வழிகாட்டி நிகழ்விலும் பங்கேற்று, மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.இவரது பெற்றோர், வியாசர்பாடியில் வசிக்கின்றனர். இந்த நிலையில், வியாசர்பாடியில் உள்ள இவரது வீட்டை மாணவர்களுக்கு பயன்படும் வகையில், நுாலகமாகவும், வழிகாட்டி மையமாகவும் மாற்றி கட்டியுள்ளார்.இது குறித்து, விஞ்ஞானி டில்லிபாபு கூறுகையில், இது பொழுபோக்கு நுாலகம் அல்ல; மாணவர்களுக்கு வழிகாட்டும் இலவச நுாலகமாகும். மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புத்தகங்கள் இங்கு இடம் பெற்றிருக்கும்.அது மட்டுமல்ல மாதந்தோறும் நிபுணர்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். இங்கு வரும் மாணவர்களின் உயர்படிப்பிற்கு பொருளாதாரம் தடையாக இருந்தால், 'கலாம் சபா' அதற்கும் உதவும், என்றார்.நிகழ்வில், தோல் ஏற்றுமதி கழக செயல் தலைவர் செல்வம், காவல்துறை ஐ.ஜி., சாமுண்டீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விருந்தினர்கள் அனைவரும் மாணவர்களுடன் சேர்ந்து, வாசிப்பின் அருமையை உணர்த்த வியாசர்பாடி வாசிக்கிறது என்ற நிகழ்வை நடத்தினர்.