அழகப்பா மாதிரி பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு அரசு பள்ளிக்கான சலுகைகள் கிடைக்குமா...
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா மாதிரி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் நலத்திட்டம், மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும்.காரைக்குடியில் 1951ம் ஆண்டு வள்ளல் அழகப்ப செட்டியார், அழகப்பா உயர்நிலை பள்ளியை துவக்கினார். 1978ம் ஆண்டு இப்பள்ளி மேல்நிலையாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி துவங்கி 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. அழகப்பா பல்கலை துவங்கியதும், அதன் நிர்வாகத்தின் கீழ் அழகப்பா மாதிரி பள்ளியை இணைத்து விட்டனர்.வள்ளல் அழகப்பர் கல்வி நிலையங்களை துவக்கியதால், காலப்போக்கில் தமிழக அளவில் சிறந்த கல்வி நகர் என்ற பெயரை காரைக்குடி தக்க வைத்து வருகிறது. அதற்கு பின் அரசிடம் இப்பள்ளியை ஒப்படைத்து விட்டனர். இருப்பினும் நிர்வாகம் மட்டும் அழகப்பா பல்கலையின் கீழ் நடந்து வருகிறது. இப்பள்ளிக்குழு தலைவராக துணைவேந்தர், செயலாளராக பதிவாளர், உறுப்பினர்களாக முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், பி.எட்., கல்லுாரி முதல்வர், சிண்டிகேட் உறுப்பினர், மூத்த ஆசிரியர் ஆகிய 7 பேர் கொண்ட குழுவினர் இப்பள்ளியை நிர்வகித்து வருகின்றனர். அதே நேரம் இப்பள்ளி வளாகம் உட்பட அனைத்து இடங்கள், கட்டடம் ஆகியவை அரசு பெயரிலேயே உள்ளது.1350 மாணவர்கள்இப்பள்ளியில் தற்போது காரைக்குடி, புதுவயல், மானாமதுரை, பரமக்குடி, புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து விடுதியில் தங்கி 1,350 மாணவர்கள் வரை படிக்கின்றனர். பட்டதாரி ஆசிரியர் 21, முதுகலை பட்டதாரி ஆசிரியர் 19, சிறப்பு ஆசிரியர்கள் என 43 பேர் வரை பணிபுரிகின்றனர்.ஆண்டுதோறும் பிளஸ் 2 முடித்து 300 மாணவர்கள் உயர்கல்விக்கு செல்கின்றனர். பெயரில் மட்டுமே அழகப்பா மாதிரி பள்ளி என உள்ளது. ஆனால், இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் நலத்திட்ட உதவிகள், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி சேர்க்கையில் கிடைக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு இல்லை. 1985ம் ஆண்டு அழகப்பா பல்கலை சார்பில் பி.எட்., கல்லுாரி துவக்கிய பின், பி.எட்., படிக்கும் மாணவர்களின் பயிற்சி களமாக அழகப்பா மாதிரி மேல்நிலை பள்ளி இருந்து வருகிறது.அரசு பள்ளிக்கான சலுகைஇப்பள்ளி சொத்துக்கள் அனைத்தும் அரசு பெயரிலும், ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசின் சம்பளத்தை பெற்றபோதும், கல்வித்துறை அதிகாரிகள் ஆவணங்களில் தொடர்ந்து தனியார் பள்ளி என்றே குறிப்பிட்டு வருவதால், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் சலுகை எதுவும் கிடைக்கவில்லை. எனவே அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அழகப்பா பல்கலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா மாதிரி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் நலத்திட்டம், இடஒதுக்கீடு கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.