யோகா, இயற்கை மருத்துவத்தில் உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வு துணைவேந்தர் தகவல்
சென்னை: உடல் பருமனால் அவதிப்படும் இளைஞர்களுக்கு, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் நல்ல தீர்வு கிடைக்கிறது என, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி பேசினார்.சென்னை கிண்டியில் உள்ள, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ இரண்டு நாள் மாநாடு நடந்தது. இதில், 71 ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெறப்பட்டு, சிறந்த 39 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மருத்துவர்கள், மாணவர்களின், 45 முழு மருத்துவக் கட்டுரைகளும் மாநாட்டில் இடம்பெற்றன.பல்கலை துணை வேந்தர் நாராயணசாமி பேசியதாவது:இன்றைய மாறுபட்ட வாழ்வில், உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சியின்மை, மகிழ்ச்சியின்மை போன்றவற்றால், சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்தக்கொதிப்பு, சிறுநீரக நோய்கள், நுரையீரல் நோய்கள் அதிகரித்து வருகின்றன.இவற்றை தவிர்க்க, சூரிய உதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும். எழுந்தவுடன், வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். நடைபயிற்சி மேற்கொள்வதுடன், காலை 8:00 மணிக்குள் காலை உணவை சாப்பிட வேண்டும். இவற்றால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.காலை உணவுடன், பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காலை உணவை விட, மதிய உணவு சற்று குறைவாகவும், இரவு உணவு மேலும் குறைவாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். இது செரிமான பாதிப்பு, குடல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.யோகா, இயற்கை மருத்துவம் ஆகியவை, பல உடல் உபாதைகளுக்கு தீர்வாக உள்ளன. குறிப்பாக, உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சிறந்த தீர்வை அளிக்கிறது. தசை, தோல் ரத்த ஓட்டத்திற்கு பலன் தரக்கூடியதாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், பல்கலை பதிவாளர் சிவசங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.