மத்திய, மாநில அரசு தேர்வுகளில் முடங்கும் மாணவர்கள்! போட்டித் தேர்வு புத்தகங்கள் இல்லை
பெ.நா.பாளையம்: கிராமப்புற நூலகங்களில் அரசு தேர்வுகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லாததால், கிராமப்புற மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள முடியாமல் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சீருடை பணியாளர்கள் துறை, அதாவது, போலீஸ், தீயணைப்பு, வனத்துறை ஆகியவற்றுக்கு தனித்தனியாக தேர்வு நடத்தாமல், ஒட்டுமொத்தமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வு நடத்தி, தேவைப்படும் நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதே போல ஆசிரியர் தேர்வு வாரியம், வங்கி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு, நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி வகுப்புகள் பெரு நகரங்களில், அதிக கட்டணத்துடன் நடத்தப்படுகின்றன. இதை நன்கு வசதியான மாணவ, மாணவியர் பயன்படுத்தி கொள்கின்றனர். ஆனால், ஏழ்மையான குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிக்கும் போட்டி தேர்வுகளில் பங்கு கொள்ள விரும்பும் ஏழை மாணவர்களால் இத்தகைய பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க முடிவதில்லை.இவர்களின வசதிக்காக கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வ தற்கான புத்தகங்களை நூலகத்துறை வாங்கி வைக்க வேண்டும். இதனால் கிராமப்புற மாணவர்கள் எளிதில் பயனடைவர்.இது குறித்து தடாகம் உஜ்ஜையனூரை சேர்ந்த ரமேஷ் கூறுகையில், சின்னதடாகம், பெரியதடாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவியர் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாவட்ட நூலகத்தை அணுக வேண்டிய சூழல் உள்ளது.இதை தவிர்க்க அந்தந்த பகுதியில் உள்ள கிளை நூலகங்களில், போட்டித் தேர்வுகளுக்கான அனைத்து புத்தகங்களையும் நூலகத்துறை வாங்கி பராமரிக்க வேண்டும். இது தொடர்பாக கோவை மாவட்ட நூலகத்துறை அலுவலருக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் அதிகாரிகள் கூறுகையில்,' மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுகிறது. இங்கு முழுக்க முழுக்க போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளன. இதை போட்டி தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர, அந்த அந்த காலகட்டங்களில் நடக்கும் போட்டி தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.போட்டித் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் வாயிலாக பதிவு செய்தும், பயிற்சி புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன' என்றனர்.