மாநில அரசு உள் இடஒதுக்கீட்டில் எஸ்.சி., - பி பிரிவுக்கு அநீதி
பெங்களூரு: உள் இடஒதுக்கீட்டில் எஸ்.சி., - பி பிரிவுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாக ஆதிதிராவிட மகாஜன சபை கண்டனம் தெரிவித்து உள்ளது.இது குறித்து, ஆதிதிராவிட மகாஜன சபையின் மூத்த தலைவர் சம்பத் ராஜ் கூறியதாவது:கர்நாடக அரசு உள் இடஒதுக்கீட்டில் பட்டியலின சமூகத்தின் எஸ்.சி., - ஏ பிரிவுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், எஸ்.சி., - பி பிரிவில் உள்ள தமிழ் பேசும் ஆதிதிராவிடர், பறையர், வள்ளுவர் உள்ளிட்ட ஜாதிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.இதனால், 1.5 கோடி பேரின் கல்வி, வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக தமிழ் ஆதிதிராவிடர்களுக்கு உயர்கல்வி நிலையங்களில் கற்கும் உரிமையும், ஊக்கத்தொகையும், அரசு வேலை வாய்ப்பும் கிடைக்காமல் போகும் அவல நிலை ஏற்படும்.இதை கண்டித்து, எஸ்.சி., - பி பிரிவில் உள்ள மற்ற ஜாதிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும். உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.