பஞ்சாப் தேர்வு முறைகேடு விவகாரம் கல்வி அமைச்சர் ராஜினாமா எப்போது? பா.ஜ., கேள்வி
சண்டிகர்: 'நீட்' எனப்படும், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த நிலையில், 'பஞ்சாபில் நடந்த தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, அம்மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் எப்போது பதவி விலகுவார்?' என, பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா நேற்று கூறியதாவது:பஞ்சாபில், பிளஸ் 2 பொதுத்தேர்வு உட்பட பல அரசு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்துள்ளன. ஆனால் இந்த விவகாரத்தில், ஆளும் ஆம் ஆத்மி மவுனம் காக்கிறது. 'நீட்' வினாத்தாள் விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சராக இருந்த எங்கள் கட்சியைச் சேர்ந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.அது போல, பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் எப்போது ராஜினாமா செய்வார்? தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரிய ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது அமைதியாக இருப்பது ஏன்?நாட்டின் கல்வி முறையை சீரமைக்க சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தான் சரியானவர் என, அரவிந்த் கெஜ்ரிவால் உண்மையிலேயே நம்பினால், அவரை பஞ்சாப் கல்வி அமைச்சராக நியமிக்கட்டும். பொறுப்புக்கூறல் என்பது எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதை பொறுத்து அமையக்கூடாது; அது சீரானதாகவும், கொள்கை ரீதியானதாகவும் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த முதல்வர் பகவந்த் மான், “ஆம் ஆத்மியின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில், ஒரு முறை கூட வினாத்தாள் கசிவு நடக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக அவதுாறு பரப்புவதை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும்,” என்றார்.