விளையாட்டு மைதானத்தில் திறந்தவெளி கிணறு - மாணவர்களின் உயிர் காக்கப்படுமா?
வாலாஜாபாத்: அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே, ஆபத்தான முறையில் திறந்தவெளி கிணறு இருப்பதால், மாணவ, மாணவியர் விளையாட்டு நேரங்களில், கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த மேல்நிலைப் பள்ளியில், 1,252 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்கள் விளையாடுவதற்காக, பள்ளியின் நடுவே மைதானம் உள்ளது. இந்த மைதானமும், விளையாட்டிற்கு தேவையான உபகரண கம்பங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு மைதானம் அருகே, ஆபத்தான முறையில் திறந்தவெளி கிணறு உள்ளது. இந்த கிணற்றின் ஒரு பகுதியில் உள்ள தடுப்பு சுவர் உடைந்து, தரை மட்டத்தில் உள்ளது. விளையாட்டு நேரங்களில் பந்து அப்பகுதியில் விழுந்தால், ஆபத்தான கிணற்றில், மாணவ, மாணவியர் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, ஆபத்து நேரும் முன், திறந்த வெளி கிணற்றின் மீது தடுப்பு கம்பி அல்லது உடைந்து விழுந்துள்ள பகுதியில், தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, மாணவ, மாணவியரின் பெற்றோர் எதிர்பார்த்து வருகின்றனர்.