உள்ளூர் செய்திகள்

இன்ஜி., கல்லூரி அதிகரித்தாலும் மாணவர் தனித்திறன் மேம்படவில்லை: முன்னாள் நீதிபதி சதாசிவம்

ஈரோட்டில், ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: சமுதாயம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு இன்ஜினியர்கள் ஆற்ற வேண்டிய பணி ஏராளம் உள்ளது. இன்ஜினியர்களுக்கு, உரிய வேலை வாய்ப்பு கிடைப்பது குறித்து, தேசிய அளவில், பிரச்னையாக இருக்கிறது என்பது, எத்தனை பேருக்கு தெரியும்? இன்ஜினியரிங் பிரிவில், அனைத்து துறைகளிலும், வேலை வாய்ப்பு இல்லாமை உள்ளது. இந்தியாவின் உயர்கல்வி முறை, உலகில் மிக பெரியது. தொழில் நுட்பத் துறையில், பட்டதாரிகள் அதிகரித்து வருவதே, வேலைவாய்ப்பு இன்மைக்கு காரணம் என்று நம்புகிறோம். தற்போது இருப்பதை விட, அதிக எண்ணிக்கையிலான இன்ஜினியர்களுக்கு, நாடு அழைப்பு விடுகிறது. இன்ஜினியர்களை உருவாக்கும் கல்லூரிகள் அதிகரித்தாலும், மாணவர்களின் தனித்திறனை மேம்படவில்லை. கடந்த நூற்றாண்டில், இன்ஜினியர்களால் பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. அவற்றை நாம் இன்று அனுபவிக்கிறோம். அபரிமிதமான உணவு உற்பத்தி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்றவை, தொழில் நுட்பத்தால் கிடைக்கிறது. தொழில் நுட்பத்தால், ஒவ்வொரு மனிதன் வாழ்விலும், தன்னிறைவு உள்ளதா என்றால், இல்லை. தற்போது இன்ஜினியர்களுக்கான வேலைவாய்ப்பு இன்மை என்பது பிரமையே. தனித்திறன் இன்மை, தகுதியின்மையே இதற்கு காரணம். வேலை தேடுபவராக இருக்கக்கூடாது. மாறாக தொழில் முனைவோராக, வேலை வாய்ப்பு அளிப்பவராக மாற வேண்டும். மாணவர்கள் தனித்திறனை வளர்க்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். இன்ஜினியர்கள் நாட்டின் சொத்து. சுற்றுச்சூழல் மாசுபடுதல் பிரச்னை பூதாகாரமாக உருவெடுத்துள்ளது. இப்பிரச்னைக்கு, தீர்வுகாண இன்ஜினியர்கள் ஒத்துழைப்பு அவசியம். தொழில்நுட்ப கல்வித்துறை, இந்தியாவில் வரும் ஆண்டுகளில் மிக பெரிய வளர்ச்சியை பெறும். எனவே, உலக தரத்துக்கு மாணவர்கள் தங்கள் தனித்திறனை வளர்த்து கொள்ள வேண்டும். ஆராய்ச்சி பிரிவுகளிலும் ஈடுபாடு காட்ட வேண்டும். சென்னை, மவுலிவாக்கத்தில், சமீபத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விவகாரத்தில், இன்ஜினியர்கள் விதிமுறைகளை மீறி கட்டியது, வெட்ட வெளிச்சமாகிறது. ஆண் ஆதிக்கம் நிறைந்த இன்ஜினியரிங் கல்வி, பணி இடங்களிலும் கூட, இன்று பெண்கள் பெரிதும் சாதித்து வருகின்றனர். சுய பரிசோதனை, சவால்கள் மூலமே, உங்கள் வருங்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. சவால்களை எதிர்கொள்ள வேண்டும். தோல்விகளால் துவளக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்