பயிற்சியாளர்கள் இல்லாததால் வீரர், வீராங்கனைகள் மாவட்ட அளவில் சாதிக்க முடியாத நிலை
ராமநாதபுரம்: மாவட்ட சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் தடகளம், ஹாக்கி, இறகு பந்து, கால்பந்து, கிரிக்கெட், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு முறையான பயிற்சியாளர்கள் இல்லாததால், வீரர், வீராங்கனைகள் மாவட்ட அளவில் சாதிக்க முடியாத நிலை உள்ளது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தவிர பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தடகளம், ஹாக்கி, வாலிபால், கூடைப்பந்து, இறகு பந்து, நீச்சல் போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்ததால், இம்மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான வீரர், வீராங்கனைகள் மாவட்ட, மாநில அளவில் சாதனை படைத்தனர். இவர்களால், மாவட்டத்திற்கும் நற்பெயர் கிடைத்தது. இங்கு பணிபுரிந்த பெரும்பாலான பயிற்சியாளர்கள் பணிமாறுதல், பணி ஓய்வு காரணமாக காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்நிலையில், இங்கு பணிபுரிந்த நீச்சல் பயிற்சியாளரும், கால்பந்து பயிற்சியாளரும் அடுத்தடுத்து பணி மாறுதல் செய்யப்பட்டனர். தற்போது, ஒரு பயிற்சியாளர் கூட இல்லாத பரிதாப நிலை விளையாட்டு மைதானத்திற்கு ஏற்பட்டுள்ளது. தடகள பயிற்சியாளர்கள் இல்லாததால், இம்மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான தடகள வீரர்கள் மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சென்று பயிற்சியில் ஈடுபடும் பரிதாப நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் வீரர், வீராங்கனைகளின் நலன் கருதி சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் பயிற்சியாளர் காலிப் பணியிடத்தை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், வீரர்களுக்கு தேவையான பயிற்சி உபகரணங்ளையும் வழங்க நவடிக்கை எடுக்க வேண்டும்.