நூலகத்தில் மாயமான நூல்கள் - ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்க உத்தரவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் 4,806 நூல்கள் மாயமானது தணிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான இழப்பீடை பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர்மாவட்ட மைய நூலகத்தில் 2012-13ம் ஆண்டு தணிக்கையின்போது 4,806 நூல்கள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. மதிப்பு 4.52 லட்சம் ரூபாய். அவற்றில் 1,000 நூல்களுக்கு 3 நூல்கள் இயல்பான கழிவு என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அவ்வாறு கழித்ததுபோக மாயமான மீதம் 3,121 நூல்களுக்காக 1 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் இழப்பீடை பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து வசூலிக்க அத்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மாவட்ட நூலக அதிகாரி ஜெகதீசன் கூறும்போது, "புத்தகம் மாயமானால் நூலக பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுவது எங்கள் துறையின் வழக்கமான நடைமுறைதான். இது ஒன்றும் புதிதல்ல. நமக்கு மட்டுமின்றி வருங்கால தலைமுறைக்கும் வழிகாட்டும் நூல்களை பாதுகாப்பது பணியாளர்களின் கடமை" என்றார்.