உள்ளூர் செய்திகள்

காந்தி கிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தின் புதிய விவசாய திட்டம்

காந்திகிராமம்: ரஷ்ய தொழில்நுட்பத்தில் விவசாயம் மேற்கொள்ள காந்தி கிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவை பாருங்கள்... சீனாவை பாருங்கள் என பல விஷயங்களில் அந்நாடுகளை உதாரணம் காட்டி கம்யூ., கட்சி தோழர்கள் கூட்டங்களில் முழங்குவர். அது, பலராலும் கிண்டல் செய்யப்படும். ஆனால், விவசாய நிலங்களை அழித்துக்கொண்டே வரும் நாம், அவற்றை எப்படி காப்பாற்றுவது என்பதை ரஷ்யாவிடம் கற்றுக் கொண்டே ஆக வேண்டும். வேளாண் தொழில்களில் நவீனம் குறித்த சர்வதேச கருத்தரங்கு ரஷ்யாவின் ஆஸ்ட்ரகான் நகரில் நடந்தது. இதில் காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உட்பட இந்தியர்கள் மூவர் பங்கேற்று திரும்பியுள்ளனர். இதுகுறித்து உதயகுமார் கூறியதாவது: விவசாய தொழிலாளர்கள் கிடைக்காததால், ரஷ்யாவில் விதைப்பது முதல் அறுவடை வரை நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயிகள் அனைவரும் தொழில்நுட்ப கருவிகள், சேமிப்பு கிடங்குகள் வைத்துள்ளனர். ஒவ்வொரு விவசாயிடமும் 100 எக்டேர் முதல் 5,000 எக்டேர் நிலம் உள்ளது. ரஷ்யா மீது சில நாடுகளின் பொருளாதார தடை இருப்பதால் விவசாய உற்பத்தியை பெருக்க 90 சதவீதம் வரை அரசு மானியம் அளிக்கிறது; வணிக சந்தையும் அமைத்து கொடுத்துள்ளது. ஒட்டுரக விதைகளை பயன்படுத்தி குறுகிய காலத்தில் அதிக மகசூல் பெறுகின்றனர். விவசாய நிலத்திற்கு ஓராண்டு வரை ஓய்வு விடப்படுகிறது. இதனால் நான்கு ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய மகசூல் ஒரே சமயத்தில் கிடைக்கும். அதேபோல் நம் பகுதியிலும் ரஷ்ய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம், என்றார். நீர் மேலாண்மை ஆஸ்ட்ரகான் என்ற இடம் சில ஆண்டுகளுக்கு முன் உவர் மண் நிலமாக இருந்தது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அங்கு உருளைக்கிழங்கு, தர்ப்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு எக்டேரில் 80 டன் வரை உருளைக் கிழங்கு கிடைக்கிறது. ஏரியில் இருந்து மோட்டார் மூலம் நீர் எடுக்கப்பட்டு குழாய் வழியாக தொலைவில் உள்ள நிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின், மழை தூவுதல் முறைப்படி நீர் தெளிக்கப்படுகிறது. இதனால் நீர் வீணாவது தடுக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்