சென்னை பல்கலை தடகள போட்டி; எம்.ஓ.பி., வைஷ்ணவா, லயோலா கல்லூரிகள் சாதனை
பெரியமேடு: சென்னை பல்கலைக்கழக தடகள போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவா லயோலா கல்லூரிகள் சாதனை படைத்தன. சென்னை பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் துறை சார்பில், 47வது தடகள போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. மூன்றாவது மற்றும் கடைசி நாள் போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவில், அரை மராத்தானில் லயோலா கல்லூரி மாணவர், தீனதயாளன் முதலிடம் பிடித்தார். 110 மீ., தடை ஓட்டத்தில், எம்.சி.சி., மாணவர், தியாகராஜன், நீளம் தாண்டுதலில், மாநில கல்லூரி மாணவர் வினோத்குமார் தங்கம் வென்றனர். 200 மீ., ஓட்டத்தில், டி.ஜி., வைஷ்ணவா கல்லூரி மாணவர் மோகன்குமார் முதலிடம் பிடித்தார். வட்டு எறிதலில், எம்.சி.சி., மாணவர் சதீஷ், 1,500 மீ., பிரிவில், எம்.சி.சி., மாணவர் மணிகண்டன் ஆகியோர் தங்கம் வென்றனர். உயரம் தாண்டுதலில், எ.எம்.ஜெயின் கல்லூரி மாணவர் வினித், டெப்தலானில் லயோலா மாணவர் அரவிந்தராஜ் தங்கம் பெற்றார். 4க்கு 100மீ., பிரிவில், லயோலா முதலிடம் பிடித்தது. 4க்கு 400மீ., பிரிவில், லயோலா மாணவர்கள், 3:17.2 வினாடிகளில் கடந்து, சாதனை படைத்தனர். இந்த பிரிவில், இதே கல்லூரி மாணவர்கள், கடந்த 2008ம் ஆண்டு, 3:19.5 வினாடிகளில் கடந்தது இதுவரை சாதனையாக இருந்தது. பெண்கள் பிரிவுகளில், அரை மராத்தானில் எம்.ஓ.பி., மாணவி விஜயலட்சுமி, 200மீ., பிரிவில் எத்திராஜ் மாணவி வினோதினி, நீளம் தாண்டுதலில் மாணவி மோனிகா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். 1500மீ., பிரிவில், சோகா இகேடா பிரியா, ஹேப்டதலானில் எம்.ஓ.பி., காயத்ரி ஆகியோர் தங்கம் வென்றனர். 4க்கு 100மீ., பிரிவில், 47.8 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தனர். எற்கனவே, எட்டு ஆண்டுகளுக்கு முன் எம்.ஓ.பி., மாணவியர் இதே பிரிவில் 48.6 வினாடிகளில் கடந்தது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 4க்கு 400மீ., பிரிவில், எம்.ஓ.பி., மாணவியர் முதலிடம் பிடித்தனர். இரண்டாம் நாள் போட்டியில், 100 மீ., ஓட்டப் பந்தயத்தில் எம்.ஓ.பி., மாணவி தீபிகா முதலிடம் பிடித்து, தங்க பதக்கம் வென்றார்.