உள்ளூர் செய்திகள்

தேர்வு மையத்தில் அதிகாரிகள் மொபைல் போன் பயன்படுத்த தேர்வுகள் இயக்ககம் தடை

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ம் தேதியும் துவங்குகிறது. தேர்வு மையங்களில் தேவையான வசதி, தேர்வு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் நியமனம், பறக்கும் படை அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு பணியில் 80 ஆயிரம் ஆசிரியர்கள், 10ம் வகுப்பு தேர்வு பணியில் 1.20 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு பணி சார்ந்த நடவடிக்கை மற்றும் விதிமுறை குறித்த கையேடுகள், அரசு தேர்வு இயக்ககம் சார்பில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில், தேர்வு நாளன்றும், தேர்வுக்கு முன்னதாகவும், மைய முதன்மை கண்காணிப்பாளர் நடத்தும் கூட்டத்தில், தேர்வறை கண்காணிப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். முதன்மை கண்காணிப்பாளரிடம், தங்களது மொபைல் போன் எண்ணை கொடுக்க வேண்டும். தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர் உட்பட, அனைத்து அலுவலர்களும், தங்களது மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்து, தேர்வு கட்டுப்பாட்டு அறையில் வைக்க வேண்டும். காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை, மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது. அங்குள்ள தொலைபேசியை பயன்படுத்திக் கொள்ளலாம். அவசர தேவைக்காக மட்டும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர் அலுவலக அறையில், மொபைல் போனை பயன்படுத்தலாம். ஒவ்வொரு தேர்வு நாளிலும், தேர்வுக்கு வராத மாணவர் பற்றிய விவரங்களை, அன்று பிற்பகல் 3:00 முதல் 4:00 மணிக்குள், www.tndge.in என்ற இணையதளத்தில், முதன்மை கண்காணிப்பாளர் பதிவு செய்ய வேண்டும். இணையதள வசதி இல்லாத பட்சத்தில், அருகில் உள்ள தேர்வு மைய கம்ப்யூட்டர் வசதியை பயன்படுத்தி அல்லது மாவட்ட கல்வி அலுவலக உதவியுடன் பதிவேற்றம் செய்ததை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்