உள்ளூர் செய்திகள்

புத்தகத்துக்கு தடையை எதிர்த்த மனு; நுால் ஆசிரியர் பதில் தர உத்தரவு

சென்னை: புத்தகத்துக்கு தடை விதித்ததை எதிர்த்த, ரிட் வழக்கு, விசாரணைக்கு ஏற்புடையதா என்பது குறித்து விளக்கம் அளிக்க, நுால் ஆசிரியருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு, மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்துக்கு தடை விதித்து, பறிமுதல் செய்ய, 2015ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, நுால் ஆசிரியர் குழந்தை ராயப்பன், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். புத்தகத்தில், ஜாதி ரீதியாக எதுவும் இல்லை எனவும், தடையை நீக்கவும் கோரியிருந்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, குற்றவியல் நடைமுறை சட்டப்படி, புத்தகங்கள்பறிமுதல் தொடர்பான வழக்குகளை, மூன்று அல்லது அதற்கும்மேல் எண்ணிக்கையிலான நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் எனக்கூறி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், சி.வி.கார்த்திகேயன், தனபால் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், புத்தகத்துக்கு தடை செய்ததை எதிர்த்து, இரு மாதங்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ரிட் வழக்காக தாக்கல் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, ரிட் வழக்காகதாக்கல் செய்த இந்த மனு, விசாரணைக்கு ஏற்புடையதா என்பது குறித்து விளக்கம் அளிக்க, மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 22க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்