எய்ம்ஸ் பணிகளை மத்திய அரசு விரைந்து முடிக்க வேண்டும்: மா. சுப்பிரமணியன்
சென்னை: மதுரை எய்ம்ஸ் கட்டட பணிகளை மத்திய அரசு விரைந்து முடிக்க வேண்டும் என சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த பின், நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.மேலும் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: டெல்டா மக்கள் பயன்பெறும் வகையில் நாகையில் ரூ.245 கோடி மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.6 நோய்களை தடுக்கும் தடுப்பூசி திட்டத்தை தமிழக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 2 லட்சம் பணியாளர்கள் மருந்து வழங்குகின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு குழந்தைத்தனமான காரணங்களை கூறுகிறது.மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால், பணிகள் துவங்கவில்லை என கூறுவது உண்மைக்கு புறம்பானது. நில ஆர்ஜிதம் செய்யாத இடத்தில், இ.பி.எஸ்., எப்படி பிரதமரை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார். போலித்தனமான காரணத்தை கூறாமல் மதுரை எய்ம்ஸ் கட்டட பணிகளை மத்திய அரசு விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.