அரசு பெண்கள் பள்ளி அருகே பார் எதிர்ப்பு பேனர் வைத்த மக்கள்
உடுமலை: உடுமலையில், அரசு பெண்கள் பள்ளி, கோவில், சர்ச் இருக்கும் பகுதியில் தனியார் மது பார் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.உடுமலை, காந்திசதுக்கம், நேரு வீதியில், அரசு பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.மேலும், சர்ச், கோவில்கள், கிறிஸ்துவர்களுக்கான கல்லறை தோட்டம், தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சி அலுவலகங்கள், அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் சுற்றிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ள குடியிருப்பு பகுதியாக உள்ளது.இப்பகுதியில், தனியார் மதுபான விற்பனையுடன் கூடிய பார் அமைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்கு, அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது:உடுமலை நகரின் மையப்பகுதியாகவும், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, ஏராளமான மாணவிகள் படிக்கும் பள்ளி, சர்ச், கோவில், கல்லறை என மக்கள் பயன்பாட்டு வழிபாட்டுத்தலங்கள் உள்ள நிலையில், இப்பகுதியில் தனியார் பார் அமைக்க திட்டமிட்டு பணிகள் துவங்கியுள்ளது.இதனால், போதை ஆசாமிகள் கூடும் மையமாக மாறி, மாணவிகள், பொதுமக்கள், வழிபாட்டு தலங்களுக்கு வரும் மக்கள் கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, தனியார் மது பார் அமைக்க அரசு அனுமதியளிக்கக்கூடாது.இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. மீறி அமைத்தால், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.