உள்ளூர் செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டுக்காக அரசு உதவித் தொகை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகங்கள் மூலம் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டுக்காக அரசு உதவித் தொகை வழங்குகிறது. பெற்றோரை இழந்தவர்கள், ஏழ்மை பெற்றோரால் கல்வி பயில வழியற்ற குழந்தைகள், சிறு வயதிலேயே கல்வியை புறக்கணித்து வேலைக்கு செல்வோரை கண்டறிந்து கல்வி கற்க நடவடிக்கை எடுக்கிறது.இதில் தேர்வு செய்யப்படும் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு, 18 வயது வரை வழங்கப்படும். இதில் எது முந்துகிறதோ அதுவரை இத்தொகை கிடைக்கும். தேவைப்படுவோருக்கு தங்கிப் படிக்கவும் காப்பக வசதி உண்டு.இதற்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் மூலம் விண்ணப்பங்களை பெற்று நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 41 பேருக்குத்தான் தேர்வு செய்து உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வரையே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.ஆனால் பெண் குழந்தைகள் உள்ள எல்லோருக்கும் இந்த உதவித்தொகை கிடைப்பதாகவும், பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்திருந்தால் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவியதால் ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் தகுதியுள்ளோர் எத்தனை பேர் எனத் தெரியவில்லை.இதுகுறித்து விசாரித்த போது, ஆண்டுக்கு 41 பேரை தேர்வு செய்தாலே அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து சீனியாரிட்டிபடி தீர்வு காண பல ஆண்டுகள் ஆகும். இதற்கு பயனாளிகள் அதிகம் பேரை தேர்வு செய்ய வேண்டும். அதற்கேற்ப அரசின் நிதிஒதுக்கீடும் அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் பலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் என்றனர்.அலுவலர்கள் சிலர் கூறுகையில், அரசு ஒவ்வொரு ஆண்டும் காத்திருப்போர் விவரங்களைக் கேட்டுப் பெற்று அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதிகளவு விண்ணப்பம் பெற்றாலும், தகுதியற்ற மனுக்கள் பல தள்ளுபடி செய்யப்படும்போது விரைவாக உதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்