முறையான கல்வியை மதரசா வழங்கவில்லை; கோர்ட்டில் குழந்தைகள் உரிமை அமைப்பு தகவல்
உத்தர பிரதேசம்: முறையான கல்வியை பெறுவதற்கு உகந்த இடமாக மதரசாக்கள் இல்லை. அவை கட்டாய கல்வி உரிமை உட்பட பல உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளன என, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் மதரசா கல்வி வாரியம் அமைப்பது தொடர்பான சட்டம், 2004ல் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த மார்ச் 22ல் பிறப்பித்த உத்தரவில், அந்தச் சட்டம் செல்லாது என்று குறிப்பிட்டது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஏப்., 5ல் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கில், குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:முறையான கல்வி முறையில் கல்வி கிடைக்காத குழந்தைகள், கட்டாய கல்வி உரிமையை இழக்கின்றனர். மேலும், மதிய உணவு, சீருடை உள்ளிட்ட பலன்களையும் இழக்கின்றனர். மதரசா எனப்படும் முஸ்லிம் மதப் பள்ளிகளில், முறையான அடிப்படை கல்வி வழங்கப்படுவதில்லை.அங்கு, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் ஒரு சில புத்தகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.ஆனால், முறையான அடிப்படை கல்வி வழங்கப்படுவதில்லை. இதனால், எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்காமல் போய்விடுகின்றன.இது குழந்தைகளின் கல்வி உரிமையையும், அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள பல்வேறு அடிப்படை உரிமைகளையும் பறிப்பதாக உள்ளது.முறையான கல்வி வழங்கும் இடங்களாக மதரசாக்கள் இல்லை. அவை பள்ளிகள் என்ற வரையறைக்குள் வராமல், தன்னிச்சையாக செயல்படுகின்றன. இது அரசியலமைப்புச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்டவற்றை மீறுவதாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.