தமிழகத்தில் விண்வெளி கருவிகள் ஆலை ஆஸ்திரேலிய நிறுவனத்துடன் அரசு பேச்சு
சென்னை: விண்வெளி துறையில் இணைந்து செயல்படுவது குறித்து, ஆஸ்திரேலிய ஸ்பேஸ் ஏஜன்சி' உடன், தமிழக அரசு பேச்சு நடத்தியுள்ளது.ஆஸ்திரேலிய நாட்டின் விண்வெளி துறை நிறுவனமான, ஆஸ்திரேலிய ஸ்பேஸ் ஏஜன்சியின் தலைவர் என்ரிகோ பலேர்மோ மற்றும் அதிகாரிகள் குழு, சென்னை வந்துள்ளனர்.அக்குழுவினர், நேற்று முன்தினம் தொழில் துறை அமைச்சர் ராஜா, டிட்கோ நிறுவனத்தின் திட்ட இயக்-குனர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகளை சந்தித்து பேசினர்.அப்போது, தமிழகத்தில் விண்வெளி துறையில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டதுடன்; இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசப்பட்டுள்ளது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆஸ்திரேலிய ஸ்பேஸ் ஏஜன்சி, விண்வெளி துறைக்கு தேவைப்படும் சாதனங்களை உற்பத்தி செய்ய உள்ளது. அவற்றை உற்பத்தி செய்யும் ஆலைகளை, துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் டிட்கோ அமைக்கும் விண்வெளி தொழில் பூங்காவில் அமைக்க வலியுறுத்தப்பட்டது.மத்திய அரசு, விண்வெளி துறையில் தனியார் ஈடுபட அனுமதி அளித்ததை அடுத்து, தமிழகத்தை சேர்ந்த, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அந்த துறையில் தொழில் துவங்க ஆர்வம் காட்டி வருகின்றன.எனவே, டிட்கோ, மத்திய அரசின், இன்ஸ்பேஸ் நிறுவனம், ஆஸ்திரேலிய ஸ்பேஸ் ஏஜன்சி ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து, கூட்டு நிதி வாயிலாக விண்வெளி துறை தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுவது குறித்தும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவுவது குறித்தும் பேசப்பட்டது.அந்நிறுவனம் தமிழகத்துடன் இணைந்து செயல்படும் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.