உள்ளூர் செய்திகள்

எங்களுக்கும் தாய்மொழி கற்கும் உரிமை வேண்டும்; முதல்வருக்கு மொழி சிறுபான்மையினர் கடிதம்

சென்னை: எங்களின் தாய்மொழியை கற்கும் உரிமை வேண்டும் என, தமிழக மொழி சிறுபான்மையினர் பேரவை தலைவர் சி.எம்.கே.ரெட்டி வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று, அவர் அனுப்பியுள்ள கடிதம்:கடந்த 1968 வரை, அனைத்து மாநிலங்களிலும் மும்மொழிக் கொள்கைதான் இருந்தது. 1968ல், அண்ணாதுரை முதல்வரானதும், இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தினார். தமிழ் அல்லது மொழிவழி சிறுபான்மையினர் தாய் மொழி, ஆங்கிலம் என, இருமொழிக் கொள்கை இருந்தது.ஆனால், 2006ல், அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் வசிக்கும் மொழிவழி சிறுபான்மையினர், தங்கள் தாய்மொழியை படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியபோது, எங்கள் வாதத்தை ஏற்றுக் கொண்டது. ஆனால், நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.கடந்த 2023ல், மொழிவழி சிறுபான்மையினரின் தாய்மொழி கற்கும் உரிமையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. நாட்டிலேயே மொழிவழி சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாநிலம் தமிழகம். மொத்த மக்கள் தொகையில், 40 சதவீதம் பேர் மொழிவழி சிறுபான்மையினர்.சி.பி.எஸ்.இ., மற்றும் சில தனியார் பள்ளிகளில், மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பெற்றோர் விரும்பினாலும், மூன்றாவது மொழி கற்க அனுமதிக்கப்படுவதில்லை.புதிய தேசிய கல்விக் கொள்கையில், எந்த இடத்திலும் ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் கட்டாயம் எனக் கூறப்படவில்லை. இரண்டு இந்திய மொழிகள் உட்பட, மூன்று மொழிகள் இருக்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது.மற்ற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள், தமிழ்மொழி கற்க வாய்ப்பளிக்க வேண்டும் என, தமிழக தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால், தமிழகத்தில் உள்ள மொழிவழி சிறுபான்மையினருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது.மொழிவழி சிறுபான்மையினரான நாங்கள், தமிழ் மொழி, கலாசாரத்தை மதிக்கிறோம். தமிழ் கற்பதற்கு எதிராக, நாங்கள் எப்போதும் இருந்ததில்லை. எங்கள் தாய்மொழியை பள்ளி பாடத்திட்டத்தில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என்பதே, எங்களின் கோரிக்கை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்