பள்ளி பாடத்திட்டத்தில் கம்பராமாயணம் சேர்க்க வேண்டும்: கவர்னர் ரவி பேச்சு
சென்னை: தமிழில் ராமாயணம் எழுதிய கம்பரை பற்றிய பாடம், பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என கவர்னர் ரவி பேசினார்.சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கம்ப சித்திரம் விழா, நேற்று நடந்தது.கம்பரையும், ராமனையும் கொண்டாடும் இந்த திருவிழாவில், முன்னாள் அமைச்சர் ஹண்டே, சாஸ்த்ரா பல்கலை இயக்குநர் சுதா சேஷய்யன், எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா, வழக்கறிஞர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.முன்னாள் அமைச்சர் ஹண்டே, தான் எழுதிய ராமாயணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நுாலை, கவர்னரிடம் வழங்கினார். கம்பராமாயணத்தை பரப்பிய தமிழறிஞர்களுக்கு, கேடயங்கள் வழங்கி, கவர்னர் ரவி பாராட்டினார்.ஆன்மிக ஆற்றல்பின், கவர்னர் ரவி பேசியதாவது:கம்பர் ராமபக்தி பற்றியும், ராமரை பற்றியும் மிகச் சிறப்பாக, நம் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியில் எழுதி உள்ளார். இந்தியர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ராமர் இருக்கிறார். பழங்குடியினருக்கு ராமாயண கதைகள் தெரிந்துள்ளன. ஆன்மிக ஆற்றலே இந்தியாவின் பலமாக இருக்கிறது.ராமாயணத்தை தெரிந்து கொள்வதன் வாயிலாக, இளைஞர்களிடையே தன்னம்பிக்கை மற்றும் எழுச்சி ஏற்படுகிறது.தனிமனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, ஆட்சி முறை என, அனைத்திற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ராமாயணம். அனைத்து தர்ம, அறநெறிகளையும் போதிக்கிறது. சாதாரண மக்களுக்கும் அது சென்றடைந்துள்ளது.வடமாநிலங்களில் துளசிதாசரின் ராமாயணம் அறிந்துள்ளனர். அதே சமயத்தில், தமிழகத்தில் ராமரை பற்றி கேட்கும்போது, அதிகம் தெரிந்திருக்கவில்லை. எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. அதேசமயம் சிவன், பெருமாள் பற்றி தெரிந்திருந்தனர்.கடந்த ஆண்டு ஜனவரி மாதம், குழந்தை ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, இந்தியா முழுதும், டிஜிட்டல் திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. தமிழகத்தில் அவ்வாறு செய்யவில்லை.ஆனால், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வீடுகளிலும் தொலைக்காட்சி நேரலையில் மக்கள் பார்த்தனர்.அரங்கேற்றம்கம்பராமாயண விழா, கடந்த மார்ச் 30ம் தேதி, மயிலாடுதுறையில் கம்பர் பிறந்த ஊரில் துவங்கியது; நாளை முடிகிறது. இதைத் தொடர்ந்து, வரும், 12ம் தேதி ஸ்ரீரங்கத்தில் கம்பராமாயண அரங்கேற்றம் நடக்கிறது.கம்பர் விழா, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமின்றி, தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். கம்பர் குறித்து பள்ளி பாடத்தில் சேர்க்கப்பட வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் கம்பரை கொண்டு செல்ல வேண்டும். மிஷன் கம்பர், மிஷன் கம்பராமாயணம்!இவ்வாறு அவர் பேசினார்.