உள்ளூர் செய்திகள்

கவுரவ விரிவுரையாளரை உதவி பேராசிரியராக பணி வரன்முறை செய்ய முடியாது: ஐகோர்ட்

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லுாரிகளின் கவுரவ விரிவுரையாளர்களை, உதவி பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.தமிழகத்தில், 14 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் பணியாற்றும், 1,146 கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்து, உதவி பேராசிரியர்களாக நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக சிறப்பு தேர்வு நடத்த, 2020ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.மேல்முறையீடுபின், 2022ல் அந்த அரசாணையை ரத்து செய்த அரசு, காலியாக இருந்த, 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், 2020 அரசாணைப்படி பணி வரன்முறை செய்ய கோரியும், கவுரவ விரிவுரையாளர்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, 'கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்வது தொடர்பான அரசாணை அடிப்படையில், தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும்' என, 2024ம் ஆண்டு ஏப்., 2ல் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, தமிழக அரசின் உயர் கல்வித்துறை, கல்லுாரி கல்வி இயக்குநரகம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: கவுரவ விரிவுரையாளர்கள், சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் அளவிலான குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்பது என்பது, உச்சநீதிமன்றம் வகுத்துள்ள தேர்வு நடைமுறை கொள்கையை நீர்த்துப் போகச் செய்துவிடும். எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.ஆறு மாதம்பணி வரன்முறை என்பதும், தேர்வு நடைமுறை என்பதும் வெவ்வேறானவை. பணி வரன்முறையை உரிமையாக கோர முடியாது. அரசு கல்லுாரிகளில் உள்ள, 1,146 உதவி பேராசிரியர் பணியிடங்கள்; பல்கலை உறுப்பு கல்லுாரிகளாக இருந்து, அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்ட கல்லுாரிகளுக்கான, 146 உதவி பேராசிரியர் பணியிடங்கள் என, மொத்தம், 1,292 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.மொத்தமாக, 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, 42,064 பேர் விண்ணப்பித்து உள்ளதால், அவர்களுக்கு போட்டி தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும். இதில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய அனுபவம் அடிப்படையில், அதிகபட்சமாக, 15 மதிப்பெண்கள் வரை, 'வெயிட்டேஜ்' ஆக வழங்கலாம்.நீண்ட காலமாக பணியாற்றிய கவுரவ விரிவுரையாளர்களுக்கு வயது வரம்பு தளர்வு வழங்க வேண்டும். இந்த நடைமுறைகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். தேர்வு நடைமுறை முடிந்து நியமன உத்தரவுகள் வழங்கும் வரை, கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருபவர்களை நீக்கக்கூடாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்