புதுச்சேரியில் தினமலர்- நீட் மாதிரி நுழைவு தேர்வு: 28ம் தேதி நடக்கிறது
புதுச்சேரி: தினமலர் நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து நடத்தும், நீட் மாதிரி தேர்வு, வரும் 28ம் தேதி புதுச்சேரியில் நடக்கிறது.தமிழகம், புதுச்சேரியில் நீட் நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் டாக்டர் கனவினை நிறைவேற்றிட தினமலர் நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து, நீட் மாதிரி தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.இந்த மாதிரி தேர்வு வரும் 28ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை, புதுச்சேரி புது பஸ்டாண்ட் மங்கலட்சுமி பின்புறம் உள்ள ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடக்கிறது.இதற்கான முன்பதிவு நேற்றுடன் முடிந்த சூழ்நிலையில் டாக்டர் கனவில், மாணவ மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.இந்த மாதிரி நுழைவு தேர்வில், முன்பதிவு செய்துள்ள புதுச்சேரி மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். இது, மாதிரி நீட் தேர்வு என்றாலும், தேசிய தேர்வு முகமை நடத்தும் அசல் தேர்வு போன்றே நடத்த அனைத்து விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.எனவே, தேசிய தேர்வு முகமை விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்துமே தினமலர் நீட் மாதிரி நுழைவு தேர்விலும் மாணவர்கள் நலனுக்காக பின்பற்றப்பட உள்ளது. எனவே நீட் தேர்வில் பங்கேற்பதற்கான சிறந்த அனுபவத்தை தினமலர் மாதிரி தேர்வில் பங்கேற்பதன் மூலம் பெற முடியும்.கேள்வி முறைநீட் நுழைவு தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய நான்கு பாடங்களில் இருந்து தலா 50 கேள்விகள் என, மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். இதில் 180 கேள்விகளை மாணவர்கள் எதிர் கொண்டு 720 மதிப்பெண்களுக்கு விடையளிக்க வேண்டி இருக்கும்.ஒவ்வொரு பாடங்களிலும் பிரிவு - ஏ, பிரிவு - பி என இரண்டு பிரிவுகளில் கேள்விகள் இடம் பெற்று இருக்கும்.ஏ - பிரிவு வினாத்தாளில் 35 கேள்விகள் 140 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். பி - பிரிவு வினாத்தாளில் 15 கேள்விகள் 40 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இவற்றில் 10 கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளிக்க வேண்டும். அனைத்து கேள்விகளும் மல்டிபிள் சாய்ஸ் என்ற கொள்குறி வகையில் இடம் பெறும். 1 கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்கள். சரியான பதிலுக்கு 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.நீட் தேர்விற்கு பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, ஒவ்வொரு கேள்விகளும் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமையில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களுக்கு தினமலரின் நீட் மாதிரி தேர்வு தங்களை சுயமாக பரிசோதித்துக்கொள்ள அரிய வாய்ப்பு.எனவே பதிவு செய்த மாணவர்கள் மிஸ் பண்ணாம பெற்றோருடன் வாங்க....