உள்ளூர் செய்திகள்

தவறான தகவல் தந்த இன்ஜி. கல்லூரிக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்!

தங்களது கல்லூரியில் வழங்கப்படும் படிப்புகளுக்கு தரச்சான்று பெறப்பட்டிருப்பதாக திருத்தணியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி தவறான தகவல் அளித்தது தெரியவந்ததை அடுத்து அண்ணா பல்கலைக்கழகம் இந்த முடிவு எடுத்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் தரச்சான்று பெறப்பட்ட படிப்புகளுக்கு ரூ.40 ஆயிரமும் தரச்சான்று பெறப்படாத படிப்புகளுக்கு 32 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் என்.பி.ஏ., அமைப்பு கல்லூரிகளில் உள்ள வசதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தரச்சான்று வழங்குகிறது. சென்னை திருத்தணியில் உள்ள லட்சுமி சந்த் ரஜனி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் இ.சி.இ., இ.இ.இ., ஐ.டி., ஆகிய நான்கு பாடப்பிரிவுகளுக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் என்.பி.ஏ., தரச்சான்று பெறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இக்கல்லூரியில் படிப்புகளுக்கு தரச்சான்று வழங்கப்படவில்லை.  பொறியியல் கவுன்சிலிங்கில் இக்கல்லூரியை தேர்ந்தெடுத்த மாணவன் ஒருவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து இந்த விவரம் தெரியவந்தது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவகரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தனியார் பொறியியல் கல்லூரிகளை பொறியியல் கவுன்சலிங்கில் சேர்க்க ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் மற்றும் பல்கலைக்கழக இணைப்பு ஆகியவைதான் மிகவும் முக்கியமானவை. தனியார் பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளில் எந்தெந்த படிப்புகளுக்கு என்.பி.ஏ., தரச்சான்று பெறப்பட்டுள்ளது என்ற விவரங்கள் அந்தந்த தனியார் பொறியியல் கல்லூரிகள் அளிக்கும் விவரங்களே தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2008 கல்லூரிகள் பற்றிய தகவல் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. லட்சுமி சந்த் ரஜனி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தங்களது கல்லூரியில் வழங்கப்படும் படிப்புகளுக்கு தரச்சான்று பெறப்பட்டுள்ளது என தகவல் வழங்கியது. அதன் அடிப்படையிலேயே அக்கல்லூரியில் உள்ள படிப்புகள் தரச்சான்று பெறப்பட்டவையாக கருதப்பட்டன. சென்னை அண்ணா  பல்கலைக்கழகத்திற்கு தவறான தகவல் வழங்கியது குறித்து விளக்கம் கேட்டு அக்கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இவ்வாறு மன்னர் ஜவஹர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்