உள்ளூர் செய்திகள்

புதிய ஆசிரியர்களுக்கு பயிற்சி திட்டம் ரத்து: பணியில் சேர உத்தரவு

சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு, 25ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 25ம் தேதி பணியில் சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கு புதிதாக தேர்வான 1,200க்கும் மேற் பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு, சமீபத்தில் சென்னையில் பணி நியமன கவுன்சிலிங் நடந்தது. புதிய ஆசிரியர்கள் அனைவரும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதாலும், ஆசிரியர் பணியில் தொடர்பு இல்லாமல் இருந்திருக்கலாம் என்பதாலும், அவரவர் பாடங்கள் சார்ந்து மூன்று நாட்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஏற்றபடி ஆசிரியர்கள் தயாராக வர வேண்டும் என முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மூன்று நாள் பயிற்சியில் பங்கேற்பதற்குத் தேவையான ஏற்பாடுகளுடன் ஆசிரியர்கள் சென்னைக்கு வந்தனர். பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும், திங்கள் முதல் புதன் கிழமை வரை சென்னையில் பல்வேறு மையங்களில் பாடவாரியாக பயிற்சி அளிப்பதற்கு திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் மூலம் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. பணி நியமன உத்தரவுகளை வழங்கும்போது, பயிற்சி சம்பந்தப்பட்ட விவரங்களை ஆசிரியர்களிடம் தெரிவிப்பதற்கு அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில், பயிற்சி அளிக்கும் திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கான காரணங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை  வட்டாரங்கள் கூறியதாவது:பணி நியமனம் செய்யப்பட்ட பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துவிட்டால், அதன் பிறகு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை பணியிட மாறுதல் பெற முடியாது. கவுன்சிலிங்கில் தங்களுக்கு கிடைத்த பணியிடம் திருப்தி அளிக்காதபோது, வேறு பணியிடத்திற்கு மாறுதல் பெறுவதற்கு, பல வகைகளில் முயற்சிக்கின்றனர். இதனால் பணி நியமன உத்தரவு பெற்றும், உடனடியாக பணியில் சேராமல் காலம் தாழ்த்துகின்றனர். கடந்த 22ம் தேதி கவுன்சிலிங் நடந்தது. 25ம் தேதி முதல் பயிற்சி நடத்த திட்டமிட்டிருந்தோம். இடைப்பட்ட இரண்டு நாட்கள் மற்றும் பயிற்சி நடைபெறும் மூன்று நாட்கள் என ஐந்து நாட்கள் வரை ஆசிரியர்கள் பணியில் சேர முடியாத நிலை இருக்கிறது. இந்த நாட்களில், தங்களுக்கு வேண்டியவர்களைப் பிடித்து பணியிட மாறுதல் கேட்டு தொந்தரவு கொடுப்பர். இதனால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர்வதில் முட்டுக்கட்டை ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காகவே, பயிற்சி அளிக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. பணி நியமன உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் 25ம் தேதி பணியில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பணியில் சேர்ந்தது உறுதி செய்யப் பட்ட பிறகு பயிற்சி நடத்தப்படும். இவ்வாறு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்