இனி பிஎச்.டி., படிப்பில் சேர இளநிலை பட்டம் பெற்றிருந்தாலே போதும்!
தற்போதைய கல்வி திட்டத்தின்படி, ஆராய்ச்சி படிப்புகளில் சேருவதற்கு முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்பதால், பிஎச்.டி., படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காகவும் உயர் கல்வியை மேம்படுத்துவது குறித்து பரிந்துரை அளிக்கவும் பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) தலைவர் சுகதேவ் தோரட் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர், சமீபத்தில் தங்கள் பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தனர். அதில், இளநிலை பட்டப்படிப்பை முடித்ததும் நேரடியாக பிஎச்.டி., படிப்பில் சேரும் வகையில் புதிய பாடத் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திலான 14 பல்கலைக்கழகங்கள் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் படி, தற்போது மூன்று ஆண்டுகளாக இருக்கும் இளநிலை பட்டப்படிப்புக்கான கால அளவு 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பரிந்துரை மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது. இதுகுறித்து சுகதேவ் தோரட் கூறியதாவது: ஆராய்ச்சிப் படிப்பில் பெரும்பாலான மாணவர்களின் ஆர்வம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் நல்ல யோசனை. வழக்கமாக பிஎச்.டி., படிப்பதற்கு நீண்ட காலம் பிடிக்கும். ஆனால், இது அமலுக்கு வரும்போது முதுநிலை பட்டம் பெற வேண்டிய அவசியம் கிடையாது. புதிதாக தொடங்க இருக்கும் 14 பல்கலைக்கழகங்களிலும் இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, நான்கு ஆண்டுகால இளநிலைப் படிப்பு அறிமுகமாகும். அதை முடித்ததும் நேரடியாக பிஎச்.டி., சேரலாம். எம்.ஏ. பட்டம் பெற விரும்பினால் ஓராண்டு காலம் படித்தால் போதும். இந்த புதிய திட்டம் குறித்து ஒரு மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.