சுயநிதி பாடப்பிரிவுள்ள கல்வி நிறுவனம் சொத்துவரி செலுத்த ஐகோர்ட் உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள கமலாட்சி பாண்டுரங்கன் பார்மசி கல்லூரி, திருப்பூர் அருகில் தொட்டிமன்னாரையில் உள்ள மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட நான்கு கல்வி நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தன. அதில், ‘பள்ளி, கல்லூரிளுக்காக கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சொத்துவரி விதித்து, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளன. கல்வி போதிப்பதற்காக இந்த கட்டடங்களை பயன்படுத்துகிறோம். எனவே, சொத்துவரி விலக்கு பெற எங்களுக்கு உரிமை உள்ளது. ஆகையால், பஞ்சாயத்துக்கள் சார்பில், அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர்கள் சீனிவாசன், அருண் ஆகியோர் ஆஜராயினர். தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து சட்டவிதி 15(சி)யின் படி, ‘அரசு உதவி பெறாத தனியார் கல்லூரிகள் பயன்படுத்தும் கட்டடங்களுக்கு சொத்துவரியில் இருந்து விலக்கு கோர முடியாது. எனவே, மனுதாரர்கள் சொத்துவரி செலுத்த வேண்டும்’ என அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுக்களை விசாரித்த நீதிபதி நாகமுத்து தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: விதி 15(சி)யின் படி, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் சுயநிதி பாடப்பிரிவுகளை நடத்தினால், அவர்களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு பெற சலுகை இல்லை. எனவே, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் கூட, சுயநிதி பாடப்பிரிவுகளை நடத்தினால், அவர்கள் சொத்துவரியை செலுத்த வேண்டும். அரசு உதவி பெறும் அல்லது உதவி பெறாத கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தும் கட்டடங்களுக்கு சொத்துவரி விலக்கு அளிக்கப்படுகிறது என்றால், புதிய விதியை கொண்டு வந்திருக்க முடியாது. எனவே, மனுதாரர்களின் வாதங்களை ஏற்றுக்கொண்டால், புதிய விதிக்கு அர்த்தம் இல்லாததாகிவிடும். விதி 15(சி)யின்படி கீழ்கண்ட கட்டங்கள் சொத்துவரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுகின்றன. அரசால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்குரிய கட்டங்கள் (அதில் விடுதி, நுõலகம் உட்பட) உள்ளாட்சி அமைப்புகளால் கல்விக்காக பயன்படுத்தப்படும் கட்டங்கள் (விடுதி, நுõலகம் கட்டடம் உட்பட) அரசு உதவி பெற்று செயல்படும் சுயநிதி பாடப்பிரிவுகள் நடத்தாத கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தும் கட்டடங்கள். ஆதரவற்றோர் மற்றும் விலங்குகளுக்காக தர்மஸ்தாபனங்களால் பயன்படுத்தப்படும் கட்டடங்கள். மனுதாரர்களைப் பொறுத்தவரை அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்கள் ஆகும். இவர்கள் கல்விக்காக கட்டங்களை பயன்படுத்தினாலும், சுயநிதி பாடப்பிரிவுகளை நடத்துகின்றனர். எனவே, இவர்கள், விதி 15(சி)யின் கீழ் கூறப்பட்டள்ள பிரிவுகளில் இடம்பெறமாட்டர்கள். ஆகையால், சொத்துவரியில் இருந்து இவர்கள் விலக்கு கோர முடியாது. இந்த கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தும் கட்டங்களுக்காக சொத்துவரி செலுத்த வேண்டும். ஆகையால், பஞ்சாயத்து சார்பில் அனுப்பியுள்ள நோட்டீசில் குறுக்கிட முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி நாகமுத்து தனது உத்தரவில் கூறியுள்ளார்.