ஆசிரியர் பயிற்சி பள்ளி அங்கீகாரம்: அரசாணைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்கு பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெறுவது போல், புதிதாக துவங்கப்படும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும், ஏற்கெனவே இயங்கிவரும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் தமிழக அரசிடம் இணைப்பு பெற வேண்டும். மாவட்ட அளவில் நியமிக்கப்படும் குழு நேரில் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின்படி, இந்த இணைப்பை ஆசிரியர் கல்வி இயக்குனர் வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த மே 3ம் தேதி பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் சுயநிதி தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பாபு மற்றும் புதிய ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் என 60க்கும் மேற்பட்டோர் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதை நீதிபதி சந்துரு விசாரித்து பிறப்பித்த உத்தரவு: சட்டத்துக்கு உட்பட்டே அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் அதிகாரத்தை மீறும் வகையில் இந்த அரசாணை இல்லை. இணைப்பு வழங்குவதை ஒரு குழு ஆய்வு செய்ய வேண்டும் என ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. கல்லூரிகளைப் பொறுத்தவரை, அதை ஆய்வு செய்யும் குழு பல்கலைக் கழகம். பட்டய படிப்புகளைப் பொறுத்தவரை மாநில அரசின் தேர்வுக் குழு தான் ஆய்வு செய்ய வேண்டும். அரசாணையில் கூறப்பட்டுள்ள எந்த வழிமுறைகளும், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் சட்டத்தையும், விதிமுறைகளையும் மீறுவதாக இல்லை. நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் இணைப்பு வழங்க அரசுக்கு அதிகாரம் இருக்கும்போது, ரப்பர் ஸ்டாம்ப் போல் அரசு செயல்பட முடியாது.ஆசிரியர் பள்ளிகளைப் பொறுத்தவரை கல்வி மேம்பாடு நலன் கருதி ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலும், மாநில அரசு அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இதனால், காளான்கள் போல் முளைக்கும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தலாம். அப்பாவி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கக் கூடாது. எனவே, தமிழக அரசு கொண்டு வந்த அரசசாணை செல்லும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.