இலவசக் கட்டாயக் கல்வி உரிமை மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டிசம்பரில் நடைபெறும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். நீண்ட காலம் நிலுவையில் இருந்த இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் 6 வயது முதல் 14 வயது வரையான குழந்தைகள் இலவசமாக கட்டாயக் கல்வி பெறுவது சட்டமாகிறது. இந்தச் சட்டத்தை அமலாக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய தொடக்கக் கல்வி ஆணையம் அமைக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் இதை ஒரு சட்டபூர்வ கடமையாக அமல்படுத்த வேண்டும். அமைச்சர்கள் குழுவால், இந்த மசோதா பல்வேறு மட்டத்தில் விவாதிக்கப்பட்டு அதன் பின்னரே, அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடப்பதால், தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பின், மசோதா விவரங்களை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிடும் என்று சிதம்பரம் தெரிவித்தார். இந்த மசோதா சட்டமாக அமலுக்கு வந்து விட்டால், மாணவர்களை பள்ளியில் சேர்க்க நன்கொடை கொடுக்க வேண்டியதில்லை. குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்துவதும் தடை செய்யப்படும். அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகளை நடத்தினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களைப் பள்ளிகளில் தண்டிப்பதற்கும் தடைவிதிக்கப்படும். சென்சஸ் நீங்கலாக கல்வி அல்லாத பணிகளுக்கு ஆசிரியர்களைப் பணியில் ஈடுபடுத்தக்கூடாது. அதற்கேற்ற வகையில் இந்த மசோதாவில் விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றார் சிதம்பரம். அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் முதல் வகுப்பில் 25 சதவீத இடங்களை அந்தப் பள்ளி அமைந்துள்ள இடம் அருகே உள்ள நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கட்டாயம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவை அந்தப் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டும் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும். அந்தந்தப் பள்ளிகளின் கல்வித்தரத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அந்தக் குழுவின் கடமையாகும். எந்த ஒரு பள்ளியிலும் 10 சதவீதத்திற்கு மேல், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடாது என்பதையும் இந்த மசோதா வலியுறுத்தியுள்ளது.