அரசு பள்ளிகளில் வசதியை மேம்படுத்த ‘தத்தெடுப்பு திட்டம்’: தமிழக அரசு
இதன்படி, தொழிலதிபர்கள், நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் விரும்பினால், அரசு பள்ளிகளை ஐந்தாண்டு ஆண்டுகளுக்கு தத்தெடுக்கலாம். அரசு பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அறிந்து, அதை நிறைவேற்றித்தர விரும்புபவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து விவரங்களை தெரிவிக்கலாம். எந்தெந்த வசதிகளை ஏற்படுத்தித்தர விரும்புகிறோம் என்பதை பட்டியலிட்டு, அது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். ஆய்வக வசதிகள், கழிப்பறை, குடிநீர் வசதிகள, கூடுதல் வகுப்பறைகள், புதிய கட்டட வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தித் தரலாம். தொழில் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், கல்வி புரவலர்கள் போன்றோர் இந்த திட்டத்தில் இணைந்து அரசு பள்ளிகளை மேம்படுத்தலாம். பள்ளி வளர்ச்சி திட்டத்தில் ஈடுபடும் புரவலர்கள், பள்ளி நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. புரவலர்கள் விரும்பினால், மேற்கொண்டு இரண்டு ஆண்டுகள் தத்தெடுக்கலாம். பள்ளி வளர்ச்சி திட்டத்தில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு நன்கொடையாக குறைந்தபட்சம் மூன்று லட்சம் ரூபாயும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஐந்து லட்சம் ரூபாயும் வழங்க அனுமதிக்கப்படுகிறது. நன்கொடையாளர்கள் விரும்பினால், அவர்களுடைய பெயரையோ அல்லது அவர்கள் விரும்பும் பெயரையோ கல்வெட்டில் பொறித்துக்கொள்ளலாம். பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் அனைத்து வசதிகளும் பள்ளிகளுக்கே சொந்தம். இந்த நடைமுறை நடப்புக் கல்வியாண்டில் இருந்தே அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.