தமிழ் வளர்ச்சித் துறையில் சேலம் மண்டல துணை இயக்குனர்பணியிடம் காலி
நாமக்கல்: சேலம், நெல்லை மாவட்டத்தில் உள்ள தமிழ்வளர்சித் துறை மண்டல துணை இயக்குனர் பணியிடம், சில ஆண்டுகளாக காலியாக உள்ளது. அதனால், உதவி இயக்குனர் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணியை ஆய்வு செய்வதில், தொய்வு ஏற்பட்டுள்ளதாக, புகார் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகத்தில், தமிழ் மொழி மூலம் ஆவணங்கள் பராமரிப்பு செய்ய வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. அரசின், இந்த உத்தரவு, அனைத்து அலுவலகங்களிலும் பின்பற்றப்படுகிறதா என்பதை, அந்தந்த மாவட்டத்தில் உள்ள, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் மட்டத்திலான அதிகாரிகள், ஆய்வு செய்து வருகின்றனர். மண்டல துணை இயக்குனர், இயக்குனர் மட்டத்திலான அதிகாரிகள் இப்பணியை செய்ய வேண்டும். தமிழகத்தில், சேலம் மற்றும் நெல்லை மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. அதில், சேலம் மண்டல துணை இயக்குனர் கட்டுப்பாட்டில், 19 மாவட்டங்கள் உள்ளன. அதுபோல், நெல்லை மண்டல துணை இயக்குனர் கட்டுப்பாட்டில், 13 மாவட்டங்கள் அடங்கியுள்ளன. இந்நிலையில், சம்மந்தப்பட்ட இரு மண்டல துணை இயக்குனர் பணியிடங்களும், சில ஆண்டுகளாக காலியாக உள்ளது.அதனால், அந்தந்த மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மட்டத்திலான அதிகாரிகள் மேற்கொள்ளும் பணியை, ஆய்வு செய்வதில் சிரமங்கள் நிலவுகிறது. எனவே, பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளித்து, மண்டல துணை இயக்குனர் பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும் என, தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.