உள்ளூர் செய்திகள்

மருத்துவ கவுன்சில் தலைவர் மீது நடவடிக்கை தேவை: பிசியோதெரபிஸ்ட்கள் மனு

திருச்சி: பிசியோதெரபிஸ்ட்களை போலி டாக்டர் என வர்ணித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் பிரகாசத்துக்கு எதிராக, மாநிலம் முழுவதும் பிசியோதெரபிஸ்ட்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பி வருகின்றனர். தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் பிரகாசம் கடந்த 29ம் தேதி பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார். அப்போது, "பிசியோதெரபிஸ்ட் படித்து முடித்தவர்கள் டாக்டர்கள் என்று குறிப்பிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். மருத்துவர்கள் என்று குறிப்பிட அவர்களுக்கு உரிமை கிடையாது. டாக்டர் என்று அவர்கள் போட்டுக்கொள்ளக்கூடாது. அது ஒரு டெக்னீஷியன் படிப்பு. பிசியோதெரபிஸ்ட்கள் தவறான சிகிச்சை அளிப்பதால், பலர் கழுத்து வலி, பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்," என குறிப்பிட்டிருந்தார். இதற்கு மாநிலம் முழுவதும் உள்ள பிசியோதெரபிஸ்ட்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்ட பிசியோதெரபிஸ்ட் சங்க தலைவர் சாய்சூர்யபிரகாஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பிசியோதெரபிஸ்ட்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் பிரகாசம் கடந்த, மார்ச் 29ம் தேதி மாலையில் வெளியான தினசரி நாளிதழில் பேட்டி அளித்துள்ளார். அதில், இயன்முறை மருத்துவர்கள் அனைவரும் போலி டாக்டர்கள் என்றும், சென்னையில் மட்டும், 200 பேர் இயங்குவதாகவும், அவர்களை கைது செய்ய வேணடும் எனவும், பேட்டி அளித்துள்ளார். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில், நான்கு ஆண்டுக்கும் மேலாக இந்த படிப்பை படித்து முடித்து தேர்ச்சி அடைந்த பிறகு தான் நாங்கள் இந்த மருத்துவத் தொழிலில் ஈடுபடுகிறோம். எங்களை போலி டாக்டர் என தவறான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகிறார். மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, நான்கரை ஆண்டு கால இளநிலை படிப்பு, இரண்டு ஆண்டு முதுநிலை படிப்பு, உலக சுகாதார மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிசியோதெரபி மருத்துவர்களை, தலைவர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் பிரகாசம் தன் அறியாமையை வெளிப்படுத்தி உள்ளார். இது எங்கள் மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சாய்சூர்யாபிரகாஷ் கூறுகையில், "தமிழகம் முழுவதும், லட்சம் பேர் பிசியோதெரபி முடித்துள்ளனர். எங்கள் தொழிலை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் முதல்வருக்கு மனு அனுப்பி வருகிறோம். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்," என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்