புதிய கட்டட வசதிகள்: ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் தீவிர நடவடிக்கை
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படுவதை அடுத்து, அந்த இடஒதுக்கீட்டினால் பொதுப் பிரிவு மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கூடுதல் மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஏற்ற வகையில் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஏழு ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களும் உள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டடங்கள் கட்டுவதற்காக ரூ.90கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோல்கட்டா ஐ.ஐ.எம்., திட்டமிட்டுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு வகுப்பறைகளும் மாணவர் தங்கும் விடுதியில் கூடுதல் அறைகளும் கட்டப்படும். இதுதவிர நிர்வாக மேம்பாட்டு மையத்தை 2010ம் ஆண்டுக்குள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டப் பணிகள் அடுத்த ஆண்டில் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தொடக்க கட்டமாக எங்களது நிதியைக் கொண்டு செலவிட்டு வருகிறோம். இந்த மேம்பாட்டுப் பணிகளுக்காக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிதியுதவி கோரவும் திட்டமிடப்பட்டுள்ளது என்கிறார் கோல்கட்டா ஐ.ஐ.எம்., தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் வர்மா. லக்னோ ஐ.ஐ.எம்.மின் நொய்டா வளாகத்தில் 2009ம் ஆண்டு மாணவர்களுக்காக ரூ.40 கோடி செலவில் 300 அறைகள் கொண்ட தங்கும் விடுதி வசதி கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் லக்னோ வளாகத்திலும் கட்டடப் பணிகளுக்காக ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. கோழிக்கோட்டில் உள்ள ஐ.ஐ.எம்., கல்வி நிலையத்தில் 84 அறைகள் கொண்ட தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளது. ரூ.58 கோடி செலவிலான கட்டடப் பணிகள் மத்திய பொதுப் பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இதேபோல பெங்களூர் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனமும் 300 பேர் தங்குவதற்கான தங்கும் விடுதியை அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.