சட்ட பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வு குழு அமைப்பதில் இழுபறி
சென்னை: சட்ட பல்கலை துணைவேந்தர் பதவி காலம் முடிந்து ஒரு மாதமாகியும், இதுவரை புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேர்வு குழு அமைக்கப்படவில்லை. தேர்வு குழுவை அமைப்பதில், இழுபறி நிலவி வருகிறது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை துணைவேந்தர் விஜயகுமாரின் பதவிக் காலம், 2013, ஜூலை, 27ம் தேதியோடு முடிந்தது. சட்ட பல்கலையின் நிர்வாக பணிகளைக் கவனிக்க, சட்டச் செயலர் ஜெயச்சந்திரன் தலைமையில், ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில், சட்டக் கல்வி இயக்குனர் நாராயண பெருமாள், பார் கவுன்சில் தலைவர் செல்வம், பார் கவுன்சில் ஆப் இந்தியா உறுப்பினர் பிரபாகரன், சட்டப் பல்கலைப் பேராசிரியரும், முன்னாள் பதிவாளருமான கோபால், சிண்டிகேட் உறுப்பினரும், வழக்கறிஞருமான சந்திரசேகர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு, கல்லூரிகளை கண்காணித்தல், ஆசிரியர் சம்பளம் விவகாரம், நிர்வாக பணிகளை கவனித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. பல்கலை துணைவேந்தர் பதவி காலம் முடிவடைவதற்கு, மூன்று மாதங்களுக்கு முன், புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய, துணைவேந்தர் தேர்வு குழு அமைக்கப்பட வேண்டும். ஆனால், துணைவேந்தர் பதவிக் காலம் முடிந்து ஒரு மாதமாகியும், துணைவேந்தர் தேர்வு குழு முழுமையாக அமைக்கப்படவில்லை. சிண்டிகேட் பிரதிநிதியாக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடராமன், சென்ட் பிரதிநிதியாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பிரதிநிதி நியமனத்தில் இழுபறி நிலவி வருகிறது.