உள்ளூர் செய்திகள்

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்!

ஈரோடு: தமிழக அரசு, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ஐ.டி.ஐ., பட்டய படிப்பு (டிப்ளமோ), இளங்கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருப்போருக்கு, ஒரு மாத காலம், தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். பின், தொழில் நுட்ப ஏற்பாடுகள் செய்ய உதவிசெய்து, வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம், கடன் பெற வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ், தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு, தொழில் திட்ட மதிப்பீட்டில், 25 சதவீதம் அதிகபட்சமாக, 25 லட்சம் ரூபாய் வரை, முதலீட்டு மானியமும், மூன்று சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, ஐ.டி.ஐ.,- பட்டய படிப்பு (டிப்ளமோ), இளங்கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருத்தல் வேண்டும். 21க்கு மேல், 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு, அதிகபட்ச வயது 45. பயனாளி, கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளிகள், குடும்ப ஆண்டு வருவாய் உச்சவரம்பு ஏதுமில்லை. இத்திட்டத்தின் கீழ், திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம், ஐந்து லட்சத்துக்கு மேல் அதிகபட்சமாக, ஒரு கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் சேவை தொழில் துவங்கலாம். பொது பயனாளிகள், தனது பங்காக திட்ட மதிப்பீட்டில், பத்து சதவீதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில், ஐந்து சதவீதம் செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அல்லது பல்லவன் கிராம வங்கி மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படும். தகுதியுள்ள படித்த இளைஞர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினரால், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். தொழில் துவங்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள இளைஞர்கள், பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சென்னிமலை ரோடு, ஈரோடு, என்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்