ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் அவதி
திண்டிவனம்: மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதியின்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். திண்டிவனம் அடுத்த சிங்கனூரில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, செயல்பட்டு வருகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி, கடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. இங்குள்ள கட்டடங்கள் பழுதடைந்து, சிமென்ட் காரைகள் மாணவர்கள் மீது விழுந்து காயம் ஏற்பட்டு வருகிறது. மேல்நிலை மாணவர்களுக்கு தமிழ் ஆசிரியர் பணியிடம், காலியாகவே உள்ளது. வணிகவியல், ஆங்கிலம் ஆகிய பாடத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மாணவ, மாணவிகளுக்கு என தனித்தனி கழிவறை கட்டப்பட்டது. இதுவரை இந்த கழிவறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வராததால், மாணவிகள் கடும் சிரமப்படுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அரிதாஸ், பள்ளி மாணவர்களுக்கு மினரல் வாட்டர் வழங்குவதற்கான வாட்டர் பியூரிபையர் வழங்கினார். பள்ளிக்கு மூன்று பேஸ் மின்சாரம் இல்லாததால், அந்த இயந்திரம் பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது. பள்ளியின் நுழைவு வாயில் பகுதியில் கேட் அமைக்கப்படாததால், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து கதவு, ஜன்னல்கள் மற்றும் சுற்றுசுவர் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்துகின்றனர். பொதுத்தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற பள்ளி, அடிப்படை வசதியின்றி உள்ளதால் மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். இப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.