உள்ளூர் செய்திகள்

மகசூல் குறையாத இயற்கை விவசாய ஆராய்ச்சியில் காந்திகிராம பல்கலை வெற்றி

திண்டுக்கல்: பாரம்பரிய விதைகளை பயன்படுத்தி மகசூல் குறையாத இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் ஆராய்ச்சியில், காந்திகிராம பல்கலை வெற்றி கண்டுள்ளது. மக்கள்தொகை பெருக்கத்தால் உணவுபொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க, ஒட்டுரக விதை, ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. ரசாயன உரங்களால் நோய் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. இதனால் மீண்டும் இயற்கை விவசாயத்திற்கு செல்ல வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செலவு அதிகம்; மகசூல் குறைவு என்பதால், அவற்றை மேற்கொள்வதில் விவசாயிகளும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் காந்திகிராம பல்கலை விவசாயம் மற்றும் கால்நடைத்துறை பாரம்பரிய விதைகளை பயன்படுத்தி மகசூல் பாதிக்காத இயற்கை விவசாய முறையை கண்டுபிடித்துள்ளது. இதில் நெல், சோளம், மா, கொய்யா, வாழை, சிறுதானிய பயிர்கள், நிலக்கடலை, காய்கறி, பூக்கள் உள்ளிட்ட 20 வகையான பயிர்களை இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்யலாம். பாரம்பரிய விதைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பசுந்தாள் உரம் கழிவுகள் கால்நடைகளின் சாணம் போன்றவை உரமாக பயன்படுத்தப்படுகின்றன. பல்கலை விவசாய மற்றும் கால்நடைத்துறை டீன் கணேஷ் கூறியதாவது: மகசூல் குறையாத வகையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இயற்கை விவசாய முறைகளை கண்டறிந்துள்ளோம். விரைவில் எங்களது ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம். இயற்கை விவசாயத்திற்கான யூனிட் அமைக்கவும், விவசாயிகளுக்கு செயல் விளக்கங்களை செய்து காண்பிக்கவும் பல்கலை மானியக்குழுவிடம் (யு.ஜி.சி.) ரூ.40 கோடி கேட்க உள்ளோம். இந்த விளைபொருட்கள் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்கள் நெருங்காது; உற்பத்தி செலவும் அதிகரிக்காது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்