உள்ளூர் செய்திகள்

திறப்பு விழா கண்ட புதிய அரசு கல்லூரி திடீர் மூடல்

தர்மபுரி: திறப்பு விழா கண்ட புதிய அரசு கலைக்கல்லூரி திடீரென மூடப்பட்டதால், கல்லூரி மாணவர்கள், மீண்டும் பள்ளி வளாகத்தில் படிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம், கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். கடந்த காலத்தில், மாவட்டத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் இல்லாமல் இருந்தது. இதனால், தர்மபுரி மாவட்டம், கல்வி அறிவில் பின்தங்கி இருந்தது. இதையடுத்து, அரசு சார்பில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களில் பள்ளிகள் துவங்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள், பள்ளி கல்வியை பெற்று வந்தனர். ஆனால், ஏராளமான கிராம மற்றும் மலைக்கிராம மக்களுக்கு, கல்லூரி கல்வி எட்டாக் கனியாக இருந்து வந்தது. குறிப்பாக, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளில், அரசு கலைக் கல்லூரி துவங்க, இப்பகுதி மக்கள், தமிழக அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதையடுத்து, 2010ம் ஆண்டு ஜூன் மாதம், பென்னாகரம்-பாப்பாரப்பட்டி சாலையில் உள்ள தித்தியோப்பனஹள்ளியில், புதிய பெரியார் பல்கலைகழக உறுப்பு கலை மற்றும் அறிவியில் கல்லூரி துவங்க, தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இக்கல்லூரி கட்ட, 15.95 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில், 67 ஆயிரம் சதுரஅடி பரப்பில், 22 வகுப்பறைகள், எட்டு ஆய்வகங்கள் மற்றும் முதல்வர் அறை, துறைத்தலைவர்கள் அறை, ஓய்வறை, நூலகம், கூட்டரங்கம் உள்ளிட்டவை கட்டும் பணி துவங்கப்பட்டது. புதிய கல்லூரியில், பி.ஏ., தமிழ், பி.எஸ்சி., கம்யூட்டர் சயின்ஸ், பி.காம்., உள்ளிட்ட மூன்று பாடப் பிரிவுகள் துவங்கப்பட்டது. புதிய கல்லூரி தற்காலிகமாக, பாப்பாரப்பட்டி அரசு பள்ளி கட்டிடத்தில் நடந்து வந்துது. புதிய கல்லூரி கட்டுமான பணி மந்த கதியில் நடந்து வந்தது. இதனால், கடந்த, செப்டம்பர் 22ம் தேதி வரை, பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில், கல்லூரி வகுப்புகள் நடந்து வந்தன. இதனால், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி, இங்கு படித்து வந்த மாணவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். மாணவர்களின் நலன் கருதி, புதிய கல்லூரி கட்டடத்தை, மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, கல்வி ஆர்வலர்கள், தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், புதிய பெரியார் பல்கலைகழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடத்தை, கடந்த செப்டம்பர் 23ம் தேதி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, வீடியோகான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில், புதிய கல்லூரி கட்டடத்தில் தொடர்ந்து வகுப்புகள் நடத்தவில்லை. இக்கல்லூரியில் படித்து வரும், 508 மாணவ, மாணவியர், தற்போது, பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைகளில், தங்களது கல்லூரி படிப்பை படிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போதிய இட வசதியின்றி, மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி, புதிய கல்லூரி கட்டடத்தில், கல்லூரி வகுப்புக்கள் நடக்க, தமிழக அரசு மற்றும் பெரியார் பல்கலைகழகம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, கல்வி ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்