ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட திருத்தணி தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி
திருத்தணி: தினமலர் நாளிதழ் டி.வி.ஆர்., அகாடமி சார்பில், திருத்தணியில் நேற்று நடந்த, ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான ஆலோசனை நிகழ்ச்சி, தினமலர் நாளிதழ் டி.வி.ஆர்., அகாடமி சார்பில் திருத்தணியில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஒன்பதாம் ஆண்டாக செங்குந்தர் திருமண மண்டபத்தில் நேற்று காலை 9:00 மணிக்கு 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான நிகழ்ச்சி நடந்தது. பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணியைச் சுற்றிலும் உள்ள கிராமப்பகுதியில் இருந்து, அதிகாலை 4:30 மணியளவில் இருந்தே நிகழ்ச்சி நடந்த மண்டபத்திற்கு மாணவ, மாணவியர் வரத் துவங்கினர். அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல், மாணவ, மாணவியர் நீண்ட வரிசையில் அமைதியாக நின்றனர். பிற்பகல் 1:00 மணிக்கு பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான நிகழ்ச்சி துவங்கியது. இதற்காக மாணவ, மாணவியர் காலை 10:00 மணிக்கே மண்டபத்திற்கு வந்தனர். இதனால் திருத்தணி நகரே குலுங்கியது. வந்திருந்தவர்களுக்கு, முக்கிய வினாக்கள் அடங்கிய புளு பிரின்ட், குறிப்பேடு, பேனா, வழங்கப்பட்டன. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், தேர்வை பயமின்றி எதிர்கொள்வது எப்படி, 100க்கு 100 மதிப்பெண்கள் பெறுவது எப்படி, தேர்வுக்கு தயாராவது எப்படி என்பது குறித்து, எளிமையாகவும், விரிவாகவும் எடுத்துக் கூறினர். கிராமப்பகுதி மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகுந்த பயனை அளித்தது.