உள்ளூர் செய்திகள்

பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற தின்பண்டங்கள்: நோய்களை விலைகொடுத்து வாங்கும் மாணவர்கள்

சத்திரப்பட்டி: பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற முறையில் ஈக்கள் மொய்க்கப்படும் தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன. சுகாதார அலுவலர்களின் கண்காணிப்பு இல்லாததால் நோய்களை விலை கொடுத்து வாங்கும் நிலை மாணவர்களுக்கு ஏற்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளின் முன்பு ஈக்கள் மொய்க்கும் தின்பண்டங்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. இதை அறியாத பள்ளி சிறார்கள் விரும்பி வாங்கி உண்கின்றனர். இதை சாப்பிடுவோர் பல வித தொற்றுநோய்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது. சத்திரப்பட்டி பகுதி பள்ளிகளின் சுற்று பகுதிகளில் திறந்தவெளி கழிப்பறை, வாறுகாலில் கழிவு தண்ணீர் வெளியேறாமல் ரோட்டில் தேங்குவது, பன்றி, நாய்களால் சுகாதார கேடு என பட்டியல் இடலாம். நான்கு ஆண்டுகளுக்கு முன் மாவட்டத்திலேயே முதன்முறையாக சத்திரப்பட்டியில்தான் சிக்-குன் குனியா நோய் பாதித்தது. அந்தளவிற்கு சுகாதாரம் இங்கு மோசமாக உள்ளது. இந்த நிலை இன்று வரை நீடிக்கிறது. இதுபோன்றுதான் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகள் இயங்குகின்றன. பள்ளி மாணவ, மாணவிகளோ கையில் காசு உள்ள சந்தோஷத்தில் சுற்றுபுற கேடுகளை பற்றி தெரியாமல் திறந்தவெளி தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இதில் அருகே உள்ள வாறுகாலில் இருந்து கொசு, ஈ, தின்பண்டங்களில் உட்காருகின்றன. விற்பவர்கள் துண்டு மற்றும் விசிறியால் விரட்டிவிட்டு பொருளை விற்பதிலே குறியாக இருக்கின்றனர். இதன் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இது தவிர தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளில் அடைத்த தின்பண்டம், காலாவதியான மிட்டாய், சிப்ஸ் போன்ற பொருட்களும் விற்கப்படுகின்றன. இதை சாப்பிடும் மாணவர்களுக்கு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. சுகாதாரமற்ற முறையில் பள்ளிகள் முன் விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து இதை தடுக்க சுகாதார துறையினர் முன் வர வேண்டும். சத்திரபட்டி மாத்தூரான், "பள்ளிகள் முன் ஈ மொய்த்த பண்டங்களை விற்பது வாடிக்கையாகிவிட்டது. இதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தற்காலிக கடைகள் கூட நிரந்தரமாக மாறிவிட்டன. சில வியாபாரிகள் குறைந்த விலை என தரமில்லாத பொருட்களை விற்கின்றனர். பள்ளி இடைவெளியின்போது இதை மாணவ, மாணவிகள் சாப்பிடும் நிலை உள்ளது. தின்பண்டங்களின் தரம் குறித்து சுகாதாரதுறை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும்" என்றார். மாரீஸ், "பழங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மற்றும் சுகாதாரத்திற்கு ஏற்றதுதான். ஆனால் அந்த பழங்களை திறந்தவெளியில் விற்கப்படுகிறது. பள்ளி அருகே மாங்காய், மாம்பழம், அன்னாசிப்பழம் போன்றவற்றை பார்ப்பவர்கள் கவரும் விதத்தில் வெட்டி அடுக்கி வைக்கின்றனர். ரோட்டோரம் இருப்பதால் தூசி படிந்து இருக்கும் என்பது குழந்தைகளுக்கு தெரியாது. இதை பார்க்கும் மாணவ, மாணவிகள் உடனே வாங்கி சாப்பிடுகின்றனர். நோய்களை விலை கொடுத்து வாங்குவதுபோல் உள்ளது. மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்பட பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்