உள்ளூர் செய்திகள்

கல்லுாரி அளவிலான விளையாட்டு போட்டிகளில் பனிமலர் பொறியியல் கல்லுாரி சாம்பியன்

தாம்பரம்: பொறியியல் கல்லுாரி அளவிலான விளையாட்டு போட்டிகளில், பனிமலர் பொறியியல் கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி சார்பில், 35வது, சாய்ராம் டைஸ் 2015 பொறியியல் கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள், மேற்கு தாம்பரத்தில் நடந்து வருகிறது. வரும் 12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி களில், 204 பொறியியல் கல்லுாரிகளில் இருந்து, 40 ஆயிரம் மாணவ, மாணவியர் விளையாடி வருகின்றனர். ஆண்கள் பிரிவில் சதுரங்கம், வாலிபால், இறகு பந்து போட்டிகளில் நிறைவு பெற்றுள்ளன. வாலிபால் போட்டியில், பனிமலர் பொறியியல் கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் வென்றது. மூன்றாம் இடத்தை முகம்மது சதக் ஏ.ஜே., பொறியியல் கல்லுாரி பிடித்தது. இறகுபந்தில் ஸ்ரீ சிவசுப்பிரமணிய பொறியியல் அணி, 2-1 என்ற செட் கணக்கில், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி அணியை வென்றது. கொங்கு பொறியியல் கல்லுாரி அணி, மூன்றாம் இடம் பெற்றது. சதுரங்கத்தில் ஒன்பது சுற்று முடிவில், பி.எஸ்.என்.ஏ., பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரி அணி முதலிடம் பெற்றது. இரண்டாம் இடத்தை, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி அணி தக்க வைத்து கொண்டது. ஸ்ரீ சிவசுப்பிரமணிய பொறியியல் கல்லுாரி மூன்றாம் இடம் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்