உள்ளூர் செய்திகள்

தேசிய கொடி வடிவில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய சி.இ.ஓ.,

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், தேசிய கொடி வடிவிலான கேக் வெட்டி, சி.இ.ஓ., மகேஸ்வரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் புத்தாண்டு கொண்டாடியது, தேசபக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி சி.இ.ஓ., மகேஸ்வரி, டி.இ.ஓ., நடராஜன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில், சி.இ.ஓ., அலுவலகத்தில், தேசிய கொடி வடிவிலான கேக்கை வெட்டி, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம், தேச பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜாராம் வர்மா கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைய ஏராளமான தியாகிகள், தங்களது உயிரை கொடுத்து போராடினர். பல தலைவர்கள் மற்றும் தேசபக்தர்கள் சிறையில் பட்ட சிரமங்கள் ஏராளம். இவ்வாறு பாடுபட்டு பெற்று சுதந்திரத்தால், அடிமைகளாய் இருந்த நாம் இன்று சுதந்திரமாக உள்ளோம். பெற்ற சுதந்திரத்தையும், தேசிய கொடியையும் அவமதிக்கும் வகையில், கல்வித்துறை அதிகாரியான சி.இ.ஓ., மகேஸ்வரி, தேசிய கொடி வடிவிலான கேக்கை வெட்டி, தேசிய கொடியை அவமதித்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்