அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதல் சீட்: மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு ‘தடை’
மதுரை: கன்னியாகுமரி குலசேகரம் மூகாம்பிகை மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதல், ‘சீட்’ ஒதுக்கும் மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. மூகாம்பிகை மருத்துவ கல்லூரி தலைவர் தாக்கல் செய்த ரிட் மனு:எங்கள் கல்லூரி, அரசு உதவி பெறாத சிறுபான்மையின நிறுவனம். கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ்., சீட்கள் உள்ளன. அனைத்து இடங்களையும் நிரப்ப சிறுபான்மையின அரசு உதவி பெறாத கல்லூரி என்ற முறையில் உரிமையுள்ளது. அரசுடன் கல்வி நிறுவனங்கள் செய்த ஒப்பந்தம் அடிப்படையில் 50 சீட் அரசு ஒதுக்கீடுக்கும், மீதமுள்ளவை நிர்வாக ஒதுக்கீடுக்கும் ஒதுக்கப்பட்டன. கடந்த கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டில் ஏழு இடங்களில் மாணவர்கள் சேரவில்லை. அந்த சீட்களில் நிர்வாகம் சார்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்தாண்டு கல்லூரியில் 57 சீட்களை அரசு ஒதுக்கீட்டிற்கும், மீதமுள்ளதை நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் ஒதுக்க இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது; இது சட்ட விரோதம். கவுன்சில் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஐசக் மோகன்லால், சேவியர் ரஜினி ஆஜராயினர். நீதிபதி எம்.சத்யநாராயணன், “அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதல் சீட்களை ஒதுக்கும் மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறேன்,” என தெரிவித்தார்.