வாசனை திரவியங்களால் ஓவியம்: வாரணாசி பல்கலை., மாணவி கின்னஸ் சாதனை
வாரணாசி: இயற்கை வண்ணப் பொடிகள் மூலமாக மிகப் பெரிய ஓவியம் ஒன்றை படைத்து உ.பி., மாநில மாணவி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.உ.பி., மாநிலம் பல்லியா மாவட்டம் கோட்வாரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி நேஹா சிங். இவர் வாரணாசி இந்து பல்கலையில் நுண்கலை முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். ஏதாவது வித்தியாசமாக சாதிக்க வேண்டும் என்று நினைத்த நேஹா இயற்கை வண்ணப் பொடிகளான மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் போன்றவற்றை பயன்படுத்தி மிகப்பெரிய ஓவியம் ஒன்றை படைக்க நினைத்தார். இதற்காக விற்பனைக்கு பயன்படாத நாட்பட்ட மஞ்சள் மற்றும் இயற்கை வண்ணப் பொடிகளை பயன்படுத்தினார்.675 சதுர அடி பரப்பளவில் மிகப் பெரிய மர ஓவியம் ஒன்றை வரைந்தார். ஓவியத்திற்கு ‛மோக்ஷ கா விருக்ஷ&' என்று பெயரிடப்பட்டது. இவருடைய ஓவியம் கின்னஸ் சாதனையாக கடந்த நவம்பர் 18 ம் தேதி கின்னஸ் பக்கத்தில் இடம் பிடித்தது. பல்லியா மாவட்ட மாசிஸ்திரேட் ஸ்ரீ ஹரி பிரதாப் சாஹி மாணவி நேஹாவை அவரது இல்லத்தில் சந்தித்து உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கி பாராட்டினார்.இதற்கு முந்தைய சாதனையாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரேயா இயற்கை வண்ணப்பொடிகளை கொண்டு 588 சதுர அடி பரப்பளவு கொண்ட ஓவியத்தை தீட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.