உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளுக்கு இலவச மின்சாரம்: பெற்றோர் ஆசிரியர் கழகம் கோரிக்கை

 தஞ்சை மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம், கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் முன்னிலை வகித்தார். புதிதாக கும்பகோணம் கல்வி மாவட்டம் தொடங்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கடந்த 15 ஆண்டாக அமைச்சுப் பணியாளர் நியமனம் செய்யப்பட்டதால் ஆசிரியர்களே அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும் நிலை உள்ளது. இதனால் கல்வித் தரம் குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதை நீக்கிட அனைத்துப் பள்ளிகளிலும் அமைச்சுப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இருக்கை வசதி செய்து கொடுக்கப்படுகிறது. மற்ற அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் தரையிலேயே அமர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையை போக்கிட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வக வசதி மற்றும் கணிதம் மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இவற்றை பாதுகாக்க ஒவ்வொரு பள்ளிக்கும் இரவுக்காவல் பணியிடத்தினை ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகள் இருந்தும் முறையான பராமரிப்பின்மையால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆதலால் கழிப்பிடங்களை பராமரிக்க துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். ப்ளஸ்1 வகுப்பில் அந்தந்த வட்டார சூழ்நிலைக்கேற்ப தேவைப்படும் புதிய பாடப்பிரிவுகள் சுயநிதி அடிப்படையில்தான் தொடங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்துதான் தப்படுகிறது. இந்த சம்பளத்தை அரசே வழங்க வேண்டும். ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப ஏதுவாக வேலை வாய்ப்பக முன்னுரிமை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குனரகம் அரசிடம் முன் அனுமதி பெற்று நிரப்பினால் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதும் அதனால் அரசுக்கு ஏற்படும் நெருக்கடியையும் தவிர்க்கலாம். பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு நிதி வசதியினை மேம்படுத்தும் விதமாக ஆண்டு சந்தா தொகை நூறு ரூபாயாக உயர்த்தி வசூலிப்பதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். தற்போது அரசுப் பள்ளிகளில் வணிக ரீதியான மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சமுதாய நலனை அடிப்படையாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனங்களை வணிக ரீதியான அணுகுமுறையில் பார்ப்பதை தவிர்த்து முழுமையான மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் போதுமான அளவு தீயணைப்பு கருவிகளை அரசு வழங்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தை ஒன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். பள்ளி வேலை நேரங்களில் காலை, மாலை தஞ்சை மாவட்டம் முழுவதும் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் அப்பாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் ஸ்ரீதர், உதவி தொடக்க கல்வி அலுவலர் மதியழகன், ஜெயக்குமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளங்கோவன், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் கல்வி மாவட்ட அனைத்து அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்