படித்த பெண்களுக்கு தன்னம்பிக்கை தான் முதலீடு: பெண் தொழிலதிபர் அருணா
மதுரை சத்ய சாய் நகரில் வசிக்கும் இவர் மதுரை மில் ஸ்டோர்ஸ் பி.லிட்., மற்றும் குயிக் கம்போஸ்ட் இயற்கை உரநிறுவனங்களின் இயக்குனர், விளாங்குடியில் அத்தியாபனா சி.பி.எஸ்.சி., பள்ளி நிறுவனர், முதல்வர் என பல பொறுப்புகளில் உள்ளார். ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், பஞ்சாபி, பெங்காலி என பன்மொழிகளில் புலமை பெற்றுள்ள இவர், கல்வித்துறையிலும் பல ஆண்டுகள் ஆசிரியர், முதல்வர் என பணிபுரிந்து சாதனைப் பெண்ணாக வலம் வருகிறார்.அவர் கூறியதாவது: சிறு வயது முதல் பள்ளி, கல்லூரி மற்றும் சமூக அமைப்பு செயல்பாடுகளில் முதலிடம், விருதுகள் பெற்றுள்ளேன். எந்த துறையாக இருந்தாலும் அதில் முதலிடம் என்பதே எனது குறிக்கோளாக இருக்கும். தொழில் முனைவோர் சார்பில் வெளிநாடுகளிலும் நடைபெற்ற பல கருத்தரங்கங்களின் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளேன். தொழில் நிறுவனங்கள் சார்பில் பல விருதுகள் கிடைத்துள்ளன. இந்திய லேடீஸ் சர்க்கிள் அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளேன்.நான்கு மாதங்களுக்கு முன் துவங்கிய அத்தியாபனா பள்ளியில் தான் முழுக்கவனம் செலுத்துகிறேன். சாதாரண குழந்தைகளின் இயலாத்தன்மையை அறிதல் என்னும் படிப்பை வெளிநாட்டில் படித்துள்ளேன். இதன் மூலம், குழந்தைகளின் குறைபாடுகளை அடையாளம் கண்டு, அதற்கேற்ப அவர்களின் திறமைகளை ஊக்குவிப்பது என்பதே ஒரு கலை. அது தான் எனது ஸ்பெஷாலிட்டி. பெண்களால் முடியாதது எதுவும் இல்லை. படித்த பெண்கள் தயக்கமின்றி தன்னம்பிக்கையுடன் திறமைகளை வெளிப்படுத்தினால், தோல்வி என்பது ஒரு போதும் கிடையாது. தன்னம்பிக்கை தான் முதல் முதலீடு. தங்களின் சக்தியையையும், திறமையையும் பயன்படுத்துவதற்கு குடும்பத்தார் ஊக்கமும், உற்சாகமும் அளிக்க வேண்டும்.எந்த காரணத்தை முன்னிட்டும் குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னர் பெண்கள் டிவி சீரியல்கள் பார்க்காதீர்கள். பெற்றோர் தங்களின் நேரத்தையும், குழந்தைகளையும் எதிர்காலத்தையும் முக்கியமாக கருதவேண்டும். இந்த நேரங்களில் பத்திரிகை, புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். தொழில் துவங்க விரும்பும் பெண்களுக்கான பல வாய்ப்புகள் உள்ளன. தாங்கள் விரும்பும் துறையை தேர்வு செய்து, தன்னம்பிக்கையுடன் அதிக ஈடுபாடுடன் செயல்பட்டால் வெற்றி என்பது எட்டும் தூரத்தில் இருக்கும். நஷ்டம், கஷ்டம் என்பது எல்லாம் வெற்றியின் படிக்கட்டுகள் தான், என்றார். இவரது மொபைல் 99943 68914.